தமிழ்…தமிழ் என எப்போதும் பேசி வரும் தமிழக முதல்வர் திருக்குறள் திரைப்படத்தினை பார்ப்பாரா?

“வெல்கம் பேக் காந்தி” மற்றும் “காமராஜர்” திரைப்படங்களை இயக்கி தயாரித்தவர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். இவ்விரு படங்களும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த வர்த்தக வெற்றியை எதிர்பார்க்காமல் சமூக சிந்தனையுடன் இவ்விரப் படங்களையும் இயக்கி தயாரித்தவர் பாலகிருஷ்ணன்.

தற்போது அவர் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் திருக்குறள். திருவள்ளுவர், திருக்குறள் மற்றும் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த திருக்குறள் படத்தை இயக்கி தயாரித்துள்ளார் பாலகிருஷ்ணன். இந்த மாதம் 27 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவிருக்கும் திருக்குறள் திரைப்படத்தின் பிரத்யேக பத்திரிகையாளர் காட்சி நேற்று திரையிடப்பட்டது. இப்படத்தில் திருவள்ளுவரின் இளமைக்காலத்தைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இந்த திருக்குறள் திரைப்படத்தில் ஒரு சில குறைகள் காணப்பட்டாலும் பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் விதத்திலும் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளை பற்றி மிக தெளிவாகவும் விவரமாகவும் சொல்லியுள்ளார் இயக்குனர் பாலகிருஷ்ணன். வர்த்தக ரீதியாக மட்டுமே வெற்றி பெறக்கூடிய படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் திருவள்ளுவர், திருக்குறள் மற்றும் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இப்படத்தை இயக்கி, தயாரித்துள்ள பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நாம் பாராட்டை தெரிவிக்க வேண்டும்.

“திருக்குறள்” திரைப்பட பத்திரிகையாளர் காட்சி முடிந்த பிறகு, இயக்குனர் பாலகிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். பத்திரிகையாளர் சந்திப்பின் போது நம் செய்தியாளர் பாலகிருஷ்ணன் அவர்களை நோக்கி, “இந்தத் திரைப்படம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு திரையிட ஏற்பாடு செய்ய உங்களுக்கு எண்ணம் இருக்கிறதா?” என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பாலகிருஷ்ணன் கூறியதாவது, “இப்படம் உருவாகும் போதே நான் செய்தித் துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் அவர்களை தொடர்பு கொண்டு இப்படத்திற்கு அரசு மூலமாக உதவி செய்து தரும்படி கேட்டேன். ஆனால் சரியான பதில் கிடைக்கப்பெறவில்லை.” என பதில் அளித்தார். அடுத்த கேள்வியாக நம் செய்தியாளர் அவரிடம் கேட்டதாவது,”இந்த திருக்குறள் திரைப்படத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திரையிட்டுக் காட்ட உங்களுக்கு ஏதாவது எண்ணம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் கூறியதாவது,”தமிழக முதல்வர் அவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். கண்டிப்பாக இத்திரைப்படத்தினை தமிழக முதல்வர் அவர்களுக்கு திரையிட்டுக் காட்ட விரும்புகிறேன். பத்திரிகையாளர்களாகிய நீங்கள் எல்லோரும் தான், நான் கூறியதை உங்கள் செய்திகள் மூலமாக தமிழக முதல்வர் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டி கேட்டுக்கொள்கிறேன்” என அவர் பதில் அளித்தார்.

திருக்குறள் திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பாலகிருஷ்ணன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்த திரைப்படத்தினை பார்ப்பதற்கு தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து, இப்படத்தினை பார்த்து பாராட்டி வெற்றி பெற வைத்து திருவள்ளுவர், திருக்குறள் மற்றும் தமிழுக்கு பெருமை சேர்ப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.