தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “வேட்டையன்” திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. கடந்த ஆண்டு பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் “ஜெயிலர்” என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த நிலையில், அப்படம் உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறியது. அதற்கு பிறகு தான் “வேட்டையன்” திரைப்படத்தில் அவர் நடிக்க தொடங்கினார். இப்போது அப்பாட பணிகளையும் முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “கூலி” என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகை பொறுத்த வரை கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான “அபூர்வராகங்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கியவர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு அறிமுகத்தை கொடுத்தவர் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் என்றால், ரஜினிகாந்தின் நடிப்புத் திறமையை மிக அழகாக வெளிப்படுத்தியவர் இயக்குனர் மகேந்திரன். அதே போல ஒரு ஆக்சன் நடிகராக ரஜினிகாந்தை பல திரைப்படங்களில் வெளிக்காட்டியவர் எஸ்.பி முத்துராமன். இப்படி இயக்குனர்களின் நடிகராக கடந்த 50 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் ரஜினிகாந்திற்கே சவால் விடுக்கும் வகையில் கடந்த 1991 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியானது ஒரு படம்.
அந்த திரைப்படத்தின் இயக்குனர், அதுவரை ரஜினியை அனைவரும் பார்த்த விதத்தில் இருந்து வேறொரு கண்ணோட்டத்தில் பார்த்தார் என்றால் அது மிகையல்ல. அதாவது ஸ்டைல் இல்லாமல், பன்ச் டைலாக் இல்லாமல் ரஜினியை வைத்து ஒரு படம் எடுத்தார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு இளையராஜா இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த்சாமி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் தான் “தளபதி”. சுமார் 33 ஆண்டுகள் கழித்தும் அந்த திரைப்படத்திற்கு இன்றளவும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து “நாயகன்” என்ற திரைப்படத்தை இயக்கிய மணிரத்தினம் தான் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை “தளபதி” திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். அதன்பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மணிரத்தினத்தோடு இணைந்து திரைப்படமே நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுமார் 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இயக்குனர் மணிரத்தினம் இணைய உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமாக இப்படம் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் அன்று இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும்கூறப்படுகிறது.
தற்பொழுது அவர் நடித்துவரும் கூலி திரைப்பட பணிகளை முழுமையாக முடித்த பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் பணிகளில் அவர் ஈடுபட உள்ளார். அப்பட பணிகளையும் முடித்த பிறகு தனது 173 ஆவது திரைப்படமாக மணிரத்தினத்துடன் அவர் இணைய வாய்ப்புகள் இருப்பதாகவும், மேலும் அந்த திரைப்படத்தோடு தனது கலை உலக வாழ்க்கைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது