இந்தியன் 2 லைக்காவின் இன்னொரு பலத்த அடியா..?

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் இந்தியன் 2. இந்த படத்தினை ஷங்கர் இயக்கியிருந்தார்.

இந்த படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டது. இதுமட்டும் இல்லாமல் இந்தியன் படத்திற்கு மூன்றாம் பாகமும் ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்த படத்தினை ரூபாய் 250 கோடி செலவில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்தியன் 2 படத்திற்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றது. இதனால் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் ட்ரைலரும் ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தினை அதிகரிக்கச் செய்தது. இதனால் படம் வேறலெவலில் உருவாக்கப்பட்டுள்ளது என கருதப்பட்டது.

இப்படியான நிலையில், படம் ரிலீஸ் ஆகி முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களையும் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. இது படக்குழுவுக்கு மட்டும் இல்லாமல், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. குறிப்பாக படத்தின் நீளம், தேவையில்லாத காட்சிகள். ஒரே டெம்ளேட்டில் பல காட்சிகள் என படம் சுமார் எனக் கூறும் அளவிற்கு கூட ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை.

வசூல்: இதனால் படத்தின் வசூல் முதல் நாளின் இரவுக் காட்சிகளில் இருந்தே குறைய ஆரம்பித்தது. படம் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அதில் இருந்து நேற்றுவரை அதாவது ஜூலை 17ஆம் தேதிவரை மொத்தம் 6 நாட்கள் திரையரங்குகளில் ஓடியுள்ளது. இந்த 6 நாட்களும் சேர்த்து படம் மிகவும் குறைவான அளவே வசூல் செய்துள்ளது.

12 நிமிடங்கள் நீக்கம்: படக்குழுவும் ரசிகர்களை தியேட்டருக்குள் கொண்டு வர எவ்வளவோ முயற்சி செய்தும், ரசிகர்கள் இந்தியன் தாத்தாவை பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. படத்தில் இருந்து 12 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படம் பார்க்க ரசிகர்கள் வருவதாகத் தெரியவில்லை. இப்படியான நிலையில் கடந்த 6 நாட்களில் படத்தின் வசூல்விபரம் குறித்து காணலாம்.

முதல் 6 நாட்கள்: படம் முதல் ஐந்து நாட்களில் சற்றேறக் குறைய ரூபாய் 65 கோடி வசூல் ஆனதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நேற்று மட்டும் இந்தியா முழுவதும் படம் ரூபாய் 3 கோடி 10 லட்சம் வசூல் செய்திருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் படம் முதல் ஆறு நாட்களில் ரூபாய் 68 கோடியே 25 லட்சங்கள் வசூல் செய்துள்ளது. ஏற்கனவே சந்திரமுகி 2, பொன்னியின் செல்வன் 2, லால் சலாம் ஆகிய படங்கள் லைகா நிறுவனத்திற்கு பெருத்த அடியாக அமைந்தது. அந்த வரிசையில் இந்தியன் 2 படமும் இணைந்துள்ளது