1996-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் இன்றும் பேசப்படும் மாபெரும் வெற்றிப் படம்.

28 ஆண்டுகள் கழித்து உருவாக்கப்பட்டுள்ள இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, நடிகைகள் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் அடுத்த மாதம் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் பிரம்மிப்பை மிஞ்சுமா இரண்டாம் பாகம் என்று ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், படத்தின் புரோமோஷனை தொடங்கிய படக்குழுவினர், இந்தியன்-2 ட்ரெய்லரை நேற்று (25-6-24) வெளியிட்டனர். முதல் பாகத்தில் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற இந்தியன் தாத்தாவை மீண்டும் நாட்டிற்கு அழைக்கும் காட்சிகள் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளன.
ட்ரெய்லரில் இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசனின் பல தோற்றங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது.இந்த தோற்றங்கள் தற்போது நெட்டிசன்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும் இந்தியன் முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா சேனாபதியின் பிறந்த வருடம் 1918 என்று காட்டப்பட்டிருக்கும் , அப்படி இருக்க இந்தியன் 2 படத்தில் சேனாபதியின் வயது கணக்கிட்டால் 106, ஆனால் இந்தியன் 2 படத்தில் இந்தியன் தாத்தாவின் வயது எவ்வளவு என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

மேலும், அப்படி பார்த்தால் இந்தியன் 2 படத்தில் 106 வயதுடைய முதியவர் எப்படி 20 கட்டுமஸ்தான உடல் கொண்ட குண்டாசுக்களை பறந்து அடித்து தொம்சம் செய்யமுடியும், மேலும் மெட்ரோவுக்குள் ஸ்கேட்டிங், அதிரடி ஆக்ஷன் எப்படி 106 வயது முதியவரால் முடியும் லாஜிக் இடிக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், பட ப்ரோமோஷனுக்காக மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகர் கமல் மற்றும் இயக்குனர் ஷங்கரிடம் இந்தியன் 2-வில் சேனாபதியின் வயது குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கமல் ஹாசன் கூறுகையில், “வயது 140 ஆக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன், 120 வயதானாலும் நான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் படத்தில் வயது என்ன என்பதை இயக்குனர் தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார். அவரை தொடர்ந்து பேசிய ஷங்கர் பதிலளிக்கையில்

“சீனாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் ஒருவர் இருக்கிறார் அவர் பெயர் லூ ஷி ஜியான். அவருக்கு வயது 120, அந்த 120 வயதிலும் பிறந்து பறந்து அடிப்பது, கால்களில் கிக் செய்வது போன்ற மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளை அவர் செய்து வருகிறார். அதே போல் தான் இந்தியன் 2 படத்தில் வரும் சேனாபதி கதாபாத்திரமும், ஏசியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் என்று சொல்லப்படும் வர்ம கலையில் அவர் மாஸ்டர் என்று இந்தியன் 2 படத்தில் சேனாதிபதியின் வயது குறித்து விளக்கமளித்தார்.