தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி.
கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன், இறைவன், சைரன் என அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகின. ஒரு சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வந்த திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கேவ்மிக் ஆரி மேற்கொள்ள லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். M. செண்பகமூர்த்தி, R. அர்ஜுன் துரை இணை தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து விட்டது என்ற அதிகாரபூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதனை கொண்டாடும் வகையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்தனர். கிருத்திகா உதயநிதி கேக் வெட்டுவதும் அதை ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனனுக்கு ஊட்டிவிடும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
படத்தின் ஆடியோ லான்ச், டீசர் ரிலீஸ் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.