பிறப்பின் அடையாளத்தை சொல்லும் பர்த் மார்க்

‘சேபியன்ஸ் (SAPIENS) எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் ஸ்ரீராம் சிவராமன் மற்றும் விக்ரம் ஸ்ரீதரன் இணைந்து இப்படத்தை எழுதியிருப்பதோடு தயாரித்தும் இருக்கிறார்கள்.

விக்ரம் ஸ்ரீதரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதில், நாயகனாக ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் நடிக்க, நாயகியாக ‘ஜெயிலர்’ புகழ் மிர்னா நடித்திருக்கிறார். இவர்களுடன் பி.ஆர்.வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

நேஞ்சுரல் பர்த்’ (Natural Childbirth) என்று சொல்லக்கூடிய இயற்கை குழந்தை பிறப்பை களமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பர்த் மார்க்’. (Birth Mark)

வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படம் பற்றி இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் மற்றும் தயாரிப்பாளரும், கதையாசிரியருமான ஸ்ரீராம் சிவராமன் கூறுகையில்,

“இது தான் எங்களுடைய முதல் படம். புதிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம், அதற்காக பல கதைகளை எழுதினோம். அப்போது தான் நேஞ்சுரல் பர்த் பற்றி விக்ரம் ஒரு விசயத்தை கூறினார். இந்தியாவின் சில மாநிலங்களில் நேஞ்சுரல் பர்த் முறை இருந்தாலும், அதை கமர்ஷியலாக அதிகம் பேர் செய்வதில்லை, சில மாநிலங்களில் மட்டும் அந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது பற்றி விரிவாகப் பேசுவதற்கு நிறைய விசயங்கள் இருந்ததால், எங்களுடைய முதல் படமாக இதை தேர்வு செய்தோம்.

நேஞ்சுரல் பர்த் என்பதால், அறுவை சிகிச்சை முறையிலான குழந்தை பிறப்புக்கு எதிராகவோ அல்லது இயற்கை குழந்தை பிறப்புக்கு ஆதரவாகவோ நாங்கள் பேசவில்லை. அதை ஒரு களமாக எடுத்துக்கொண்டு ஒரு தம்பதியின் மனப்போரட்டங்களையும், தனிமைப்படுத்துதலில் அவர்களுக்கு இடையே ஏற்படும் மாற்றங்கள், அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதனால் அவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், இதை எல்லாம் தாண்டி மிர்னாவின் குழந்தை பிறப்பு எப்படி நடக்கிறது?, படத்தில் இடம்பெறும் லொக்கேஷன்கள் போன்றவை தான் படத்தின் முக்கிய அம்சங்கள், அவற்றை தான் நாங்கள் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறோம்.

த்ரில்லர் ஜானர் என்று சொல்வதை விட, படம் பார்க்கும் ரசிகர்கள் படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை த்ரில்லர் மனநிலையில் இருப்பார்கள்.

ஷபீர் மற்றும் மிர்னா இருவரை சுற்றி தான் கதை நகரும். இவர்களை தாண்டி நான்கு கதாபாத்திரங்கள் வருவார்கள். ஆனால், ஷபீர் மற்றும் மிர்னா இவர்களுடைய கதாபாத்திரம் மற்றும் அதில் அவர்கள் வெளிப்படுத்திய நடிப்பு, ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்க்கும்படி இருக்கும். மிர்னாவை ஆடிசன் மூலமாகத்தான் தேர்வு செய்தோம்.

படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை விவரித்த உடன் அந்த காட்சியில் நடிக்கும் முறையை ஷபீர் மற்றும் மிர்னா செய்யவில்லை. அவர்கள் எப்போது இந்த கதையை கேட்டார்களோ அதில் இருந்து கதாபாத்திரத்திற்காக தங்களை மனதளவில் தயார்ப்படுத்திக் கொண்டார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிர்னா, தனியாக அமர்ந்து குழந்தையுடன் பேசிக்கொண்டு இருப்பார், ஷபீரும் தனது கதாபாத்திரத்தின் மனமாற்றத்திற்கு ஏற்றவாறு, யாருடனும் பேசாமல் அந்த உணர்வுடனேயே தனிமையில் இருப்பார். இவர்கள் கதாபாத்திரத்திற்காக தங்களை இப்படி மனதளவில் தயார்ப்படுத்திக் கொண்டு நடித்ததால், படத்தின் அனைத்து காட்சிகளும் மிக இயல்பாக வந்திருக்கிறது. நிச்சயம் ஷபீர் மற்றும் மிர்னாவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டுவார்கள்” என்றார்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இனியவன் பாண்டியன் படத்தொகுப்பு செய்ய, ராமு தங்கராஜ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். கூடுதல் திரைக்கதை பணியை அனுசுயா வாசுதேவன் கவனித்துள்ளார்.