இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவருகிறது “ஃபைட் கிளப்”. திரைப்படம். ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக, இணையதள, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, “இந்தப்படம் மாநகரம் மாதிரி தான், எனக்கு இது ஒரு புதிய தொடக்கம். உங்கள் ஆசியோடு தொடங்க ஆசை. உறியடி விஜய் குமார், அவன் பேரும் என் பேரும் ஒரு படத்தில் ஒன்றாக வர வேண்டும் என்று 2017 லிலிருந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். அது இப்போது நடப்பது மகிழ்ச்சி. எனக்குத் தெரிந்த மிக நேர்மையான மனிதன் விஜய்குமார். எப்போதும் சினிமா பற்றி மட்டுமே சிந்திப்பவன், இந்தப்படத்தை நான் வெளியிடுவது, படக்குழுவிற்குச் செய்யும் நல்லதல்ல, நான் என் கம்பெனிக்கு செய்து கொண்ட நல்ல விசயம் அவ்வளவு தான். இந்தப்படத்தில் அத்தனை பேரும் அவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார்கள், விஜய் குமாரை தவிர இந்தப்படத்தில் பல புதுமுகங்கள் உழைத்துள்ளார்கள். படத்திற்குப் பிறகு எல்லோரும் பெரிதாகப் பேசப்படுவார்கள். நான் படம் செய்ய ஆசைப்பட்ட போது என் நண்பர்கள் தான் பணம் போட்டு குறும்படம் எடுக்க வைத்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஏதாவது செய்வேன் என எவரும் நினைக்கவில்லை. எனக்காக மட்டுமே செய்தார்கள், அதே போல் நான்கு பேருக்கு நான் செய்ய வேண்டுமென நினைக்கிறேன், அவ்வளவு தான், அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனம். ஜி ஸ்குவாட் நிறுவனத்தோட அபீசியல் பார்ட்னர்ஸ் ஜெகதீஷ் மற்றும் சுதன் இருவரும் தான். அவர்களுக்கு நன்றி. நல்ல படங்களை தர இந்த நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள்.” என லோகேஷ் கனகராஜ் பேசினார்.
“இந்தப்படத்தை நான் வெளியிடுவது, படக்குழுவிற்குச் செய்யும் நல்லதல்ல, நான் என் கம்பெனிக்கு செய்து கொண்ட நல்ல விசயம் அவ்வளவு தான்.” என்று லோகேஷ் கனகராஜ் பேசியது அவர் சுயநலத்தோடு இப்படத்தை வழங்குகிறார் என்று நமக்கு தோன்றும். ஆனால் அவர் தன்னுடைய நண்பர்களுக்கு தன்னால் முடிந்த வரை திரைத்துறையில் உதவி செய்யும் மனப்பான்மையில் தான் இந்த படத்தை வெளியிடுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கியுள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தில் விஜய் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்குக் கதையை சசி அவர்கள் அமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளைக் கிருபாகரன் மேற்கொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி மற்றும் அம்ரீன் – அபுபக்கர் ஆகியோர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். கிரியேட்டிவ் புரடியூசராக விஜய் குமார் பணியாற்றியுள்ளார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை, ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.
இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சொந்தமாகத் தொடங்கி இருக்கும் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் முதல் படைப்பாக இப்படத்தை வழங்குகிறார் லோகேஷ் கனகராஜ்.