ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் ’96’ படத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும்…

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில் ரியோ ராஜ், அன்பு தாசன், மாளவிகா மனோஜ், ஏகன், பவ்யா திரிக்கா நடிப்பில் ஹரிஹரன் ராம் இயக்கி இருக்கும் படம் ’ஜோ’. ’மீசையை முறுக்கு’, ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஹரிஹரன் ராம்.

கேரளா தமிழ் நாடு எல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் சில மாணவ மாணவியரின் பதினேழு வயது முதல் இருபத்தி ஏழு வயது வரையிலான வாழ்க்கையை மூன்று கட்டங்களாக சொல்லும் படம் இது. ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கும் கேரளப் பெண்ணுக்கும் வரும் காதலும் அதன் விளைவுகளுமே இந்தப் படம். இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஒரிஜினலாக தாடி வளர்த்ததாகவும் இதனால் வேறு எந்த பட வாய்ப்புகளையும் ஏற்க முடியவில்லை என்கிறார் ரியோ.

இந்தப் படத்திற்கு ராகுல் கே விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, இசை சித்து குமார், படத் தொகுப்பு கே ஜி வருண். படத்தில் ஒரு கல்லூரி நடனப்பாடல் மற்றும் மிகக் குறைவான இசைக் கருவிகளை வைத்து யதார்த்தமான ஒலிகளோடு அந்தப் பாடல் அமைத்து இருக்கிறோம் என இசையமைப்பாளர் சித்து குமார் கூறியுள்ளார். மேலும் இவரது இசையில் வைசாக் பாடல் வரிகளில் உருவாகியுள்ள ‘ஒரே கனா’ பாடலில் யுவன் ஷங்கர் ராஜா தோன்றியுள்ளது படத்திற்கு பெரும்பலம் எனப் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் ரியோ ராஜ் & பவ்யா திரிகா ஆகியோர்  முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைக்க, ராகுல் கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய வருண் கே.ஜி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

‘ஜோ’ திரைப்படத்தின் குழுவினர் சில தினங்கள் முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றி பேசியபோது, அப்படத்தின் டீஸர், டிரெய்லர் மற்றும் பாடல்களை பிரத்தேகமாக ஒளிபரப்பி காட்டினர். ‘ஜோ’ படத்தின் டீஸர், டிரெய்லர் மற்றும் பாடல் காட்சிகளை பார்க்கும் போது சில வருடங்கள் முன்பு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்த ’96’ படத்தை பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பார்த்த காட்சிகள் அனைத்தும் படத்தின் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிக நேர்த்தியாக பணியாற்றி இருப்பார்கள் என்பதை சொல்கிறது.

‘ஜோ’ திரைப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.