“வைஃப்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு ரசிகர்களை கவர்ந்துள்ளது
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், அம்பேத்குமார் வழங்க, ஹேமநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள “வைஃப்” திரைப்படம், நவீன கால திருமண வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு காதல் நாடகமாகும். இதில் விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “நீ சாரல்” வெளியாகி, இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த இனிமையான மெலடி பாடலுக்கு ஜென் மார்டின் இசையமைத்து, சுபலக்ஷினியுடன் இணைந்து பாடியுள்ளார். பாடலின் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். மென்மையான இசையும், மனதை தொடும் வரிகளும் இணைந்து, இந்தப் பாடலை ஒரு அழகான காதல் அனுபவமாக மாற்றியுள்ளது. வெளியான உடனேயே சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, இளைஞர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது.
திரைப்படம், திருமணத்திற்கு முன் இருக்கும் காதலும், திருமணத்திற்கு பின் உருவாகும் உறவுகளும் எப்படி மாறுகின்றன என்பதையும், இன்றைய தலைமுறையின் உறவுச் சிக்கல்களையும் நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் இணைந்து ரசிக்கக்கூடிய ஒரு உணர்ச்சி மிகுந்த காதல் நாடகமாக இது உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் மைத்திரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை சக்திவேல் மேற்கொண்டுள்ள நிலையில், எடிட்டிங்கை தினேஷ் பொன்ராஜ் செய்துள்ளார். கலை இயக்கத்தை சிவ சங்கர் கவனித்துள்ளார். நடன அமைப்பை தினேஷ், அசார், ராதிகா ஆகியோர் வடிவமைத்துள்ளனர். காட்சிப்படுத்தல் பணிகளை ஹோகஸ் போகஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.