லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ டீசருக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு

லெஜெண்ட் சரவணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘லீடர்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையரங்கில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடைபெற்றது. இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

ஒரு நிமிடம் 21 விநாடிகள் நீளமான டீசரில் லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் சமூக ஊடகங்களிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சாதாரண மனிதன் அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் உணர்ச்சிப் பயணத்தை மையமாகக் கொண்ட இப்படம், தனது மகளுக்காக எதையும் செய்யத் தயங்காத தந்தையின் கதையை கூறும் என இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் வைபோதா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பையும் மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளையும் கவனித்துள்ளனர்.

தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட ‘லீடர்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.