லவ் டுடே’க்கு பின் மீண்டும் மின்னும் பிரதீப் – தீபாவளிக்கு வருகிறது ‘ட்யூட்’!

லவ் டுடே’, ‘ட்ராகன்’ என இரண்டு ஹிட் படங்களால் தமிழ் திரையுலகில் தன்னுடைய தனி இடத்தைப் பிடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதன், தற்போது தனது மூன்றாவது படமான ‘ட்யூட்’ மூலம் ரசிகர்கள் முன் வருகிறார்.

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், முன்னணி தயாரிப்பு நிறுவனம் ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரித்திருக்கும் இப்படம், தீபாவளி பண்டிகை நாளில் வெளியிடப்படுகிறது.

‘பிரேமலு’ மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த மமிதா பைஜூ, பிரதீப்புக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஏற்கனவே வெளியான பாடலால் ரசிகர்களிடையே பெரும் ஹைப் உருவாகியுள்ளது.

இயக்குநர் கீர்த்தீஸ்வரன், இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக இணைந்து ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர். 27 வயதிலேயே தன் முதல் படத்தை இயக்கும் இவர், “ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி வழியாக மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் கதையைச் சொன்னேன். அவர்கள் உடனே ஒப்புக் கொண்டனர். கதை எழுதும் போது, ‘ரஜினி சார் 30 வயதில் இருந்தால் இந்தக் கதையில் எப்படி நடிப்பார்’ என்று நினைத்து எழுதினேன். அந்த மாஸ் எனர்ஜிக்கு பொருந்தியவராக பிரதீப் இருந்தார். அவருக்கும் கதை பிடித்தது,” எனக் கூறுகிறார்.

படம் முழுவதும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளதுடன், கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்துவார்கள் என்பதே கதையின் கரு. “இது வெறும் லவ் படம் அல்ல, இதில் ஒரு மாஸ் கலந்திருக்கிறது. அது படம் பார்த்தால் புரியும். என் முதல் படம் தீபாவளிக்கே வெளியாகிறது என்பது என் கனவு நனவாகியதுபோல,” என்று இயக்குநர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

நாயகியாக மமிதா பைஜூவை தேர்வு செய்தது குறித்து அவர், “அவரின் பிரேமலு வெளியாவதற்கு முன்பே, ‘சூப்பர் சரண்யா’ பார்த்தபின் அவரைத் தேர்வு செய்தோம். மமிதா வந்தவுடன், படம் ரஜினி-ஸ்ரீதேவி கெமிஸ்ட்ரி மாதிரி ஒரு ஃபீல் கொடுத்தது,” என தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் குழுவைப் பற்றி பேசும் கீர்த்தீஸ்வரன், “காஸ்ட்யூம், லொகேஷன், விஷுவல் எல்லாம் மிகுந்த நுணுக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் புதிய முயற்சியுடன் வந்திருக்கிறார். அவரது பாடல்கள் நிச்சயமாக ரசிகர்களை கவரும்,” என்றார்.

படத்தில் பிரதீப், மமிதா தவிர, சரத்குமார், ரோகிணி, மற்றும் பரிதாபங்கள் புகழ் டேவிட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“பிரதீப்பின் முந்தைய படங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் இதில் காணலாம். அதோடு, அவர் இதுவரை செய்யாத புதிய விஷயங்களும் இதில் இருக்கும். எனவே, இது ஒரு சாதாரண காதல் படம் அல்ல; அதைவிட பல அடுக்குகள் கொண்ட ஒரு முழுமையான எண்டர்டெயின்மெண்ட் படம்,” என்று இயக்குநர் கீர்த்தீஸ்வரன் உற்சாகமாக கூறினார்.