விதார்த் நடிப்பில் விவசாயியின் கதையை சொல்லும் “மருதம்” – அக்டோபரில் வெளியீடு!

விவசாயியின் வாழ்வியலையும், விவசாய நிலத்தின் அவசியத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. Aruvar Private Limited சார்பில் C. வெங்கடேசன் தயாரிக்க, இயக்குநர் V. கஜேந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் விதார்த் நாயகனாக நடித்துள்ளார்.

இன்றைய சமூகத்தில் ஏமாற்றமும் சதியும் சாதாரணமாகிப் போன சூழலில், அதனால் பாதிக்கப்படும் ஒரு விவசாயியின் வாழ்க்கை இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. அந்த விவசாயி தனது சோதனைகளிலிருந்து மீள்கிறானா என்பதே கதை நகரும் விதம். பரபரப்பும், வலிமையான திரைக்கதையும், கமர்ஷியல் அம்சங்களும் கலந்து உருவான இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்தும், முன்னணி இயக்குநர்கள் சரவண சுப்பையா, மோகன் ராஜா, பொம்மரிலு பாஸ்கர் ஆகியோரிடம் பணிபுரிந்தும் அனுபவம் பெற்ற கஜேந்திரன், தற்போது SRM கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் முதல் இயக்குநர் முயற்சிதான் “மருதம்”. தமிழின் ஐந்திணைகளில் ஒன்றான “மருத நிலம்” என்பதைக் குறிக்கும் வகையில் இப்படத்திற்கு “மருதம்” என பெயரிடப்பட்டுள்ளது.

விதார்த் உடன் ரக்‌ஷனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மாத்யூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தை மையமாகக் கொண்டு முழுப் படப்பிடிப்பும் அப்பகுதியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இசையை N. R. ரகுநந்தன் அமைக்க, அருள் சோமசுந்தம் ஒளிப்பதிவை கையாள. சந்துரு B எடிட்டிங் பணியை செய்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், “மருதம்” திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.