அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் ஜோடியின் புதிய படம்! பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்!!

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் அசோக் செல்வன், நடிகை நிமிஷா சஜயன் ஜோடியாக நடிக்கின்றனர்.

அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் இந்த படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு தனது ஆறாவது படைப்பாக இந்த படத்தை உருவாக்குகிறது. அதே சமயம், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தனுஷ் நடிக்கும் “D54” மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2” போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது.

இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இந்த புதிய படத்தை, யுவராஜ் கணேசன் மற்றும் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கின்றனர்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்து வரும் அசோக் செல்வன், இந்த படத்திலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்க, புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் விக்ரமன் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.