‘அக்யூஸ்ட்’ வெற்றி – ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழு

ஆகஸ்ட் 1 அன்று வெளியான ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் தற்போது ரசிகர்களின் நல்ல வரவேற்புடன் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவான இந்த படம், சென்னையில் வெற்றி விழாவை நடத்தி, ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்தது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகிய தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம், “இந்த வெற்றிக்கு நடிகர் உதயா காரணம். படப்பிடிப்பு முதல் இன்று வரை அவர் அனைவரையும் ஒருங்கிணைத்து வழிநடத்தினார். தொடர்ச்சியாக நல்ல படங்களில் வெற்றி பெற வேண்டும்,” என்றார்.

இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், “‘அக்யூஸ்ட்’ வெற்றி பெற காரணம் ஊடகங்களும் ரசிகர்களும் தான். அமெரிக்காவிலிருந்தும் பாராட்டுகள் வந்துள்ளன. இந்த வெற்றிக்கான முதன்மை காரணம் உதயா,” எனக் கூறினார்.

நடிகர் ஏ. எல். உதயா, “இந்தப் படம் வெளியாகக் கூடாது என சில தடைகள் இருந்தும், ஊடகங்களும் மக்களும் நம்மை காப்பாற்றினார்கள். மூன்றாவது வாரமாக ஓடிக்கொண்டிருப்பதே பெரிய வெற்றி. இந்த டீம் மீண்டும் ‘டண்டனக்கா டான்’ என்ற படத்தில் இணைய உள்ளது,” என தெரிவித்தார்.

‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், ஜான்விகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஒளிப்பதிவாளர் மருதநாயகம், ஸ்டண்ட் சில்வா உள்ளிட்ட பலரும் பணியாற்றியுள்ளனர்.