இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி இணையும் ‘நூறு சாமி’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான சிறப்பு நிகழ்வு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ‘பிச்சைக்காரன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணியின் புதிய படத்தை வரவேற்கும் வகையில் தமிழ் திரையுலகின் பல முக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றுகூடி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் சசி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியுடன் சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக பாலாஜி ஸ்ரீராம் அறிமுகமாகிறார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின், கார்த்திக் சுப்புராஜ், லிங்குசாமி, ராஜூ முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படத்தையும் இயக்குநர் சசியின் படைப்புத் திறனையும் பாராட்டிப் பேசினர்.

படத்தை பார்த்த அனுபவத்தை பகிர்ந்த வெற்றிமாறன், சசி ஒவ்வொரு படத்தையும் தனது முதல் படைப்பைப் போலவே அர்ப்பணிப்புடன் உருவாக்குபவர் என குறிப்பிட்டார். இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கவரும் வகையில் ‘நூறு சாமி’ உருவாகியிருப்பதாகவும் அவர் பாராட்டினார்.

பா.ரஞ்சித் தனது உரையில், இயக்குநர் சசி தன்னுடைய ஆரம்பகால போராட்ட நாட்களில் அளித்த ஊக்கத்தை நினைவுகூர்ந்தார். ‘நூறு சாமி’ திரைப்படம் சமூகத்தில் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டிய பல முக்கிய அம்சங்களை பேசுவதாகவும், படத்தின் உணர்வுப்பூர்வமான தருணங்கள் மனதை ஆழமாகத் தொட்டதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தக் கதையை திரையில் கொண்டுவர சசி எடுத்த முயற்சியை பாராட்டினார். குறிப்பாக நடிகை சுவாசிகாவின் நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மிஷ்கின் தனது வழக்கமான உணர்ச்சிமிக்க உரையில், சசியை மனிதநேயத்தின் அடையாளமாக வர்ணித்தார். பெண்களின் வாழ்க்கை, அவர்களின் உணர்வுகள் மற்றும் சமூகத்தின் பார்வை குறித்து ஆழமாக சிந்திக்க வைக்கும் படமாக ‘நூறு சாமி’ இருக்கும் என்றார்.

ராஜூ முருகன் பேசுகையில், பெண்களைப் பற்றிய சமூக பார்வையை கேள்விக்குள்ளாக்கும் முக்கியமான திரைப்படமாக ‘நூறு சாமி’ இருக்கும் என குறிப்பிட்டார். ஆண்களும் பெண்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இது அமையும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாலாஜி ஸ்ரீராமை விஜய் ஆண்டனி, எஸ்.எஸ்.குமரன், சிமோன் மற்றும் சித்து குமார் ஆகியோர் இணைந்து வாழ்த்தி அறிமுகப்படுத்தினர். இயக்குநர் சசியின் நம்பிக்கையும் வழிகாட்டுதலுமே இந்த வாய்ப்பை பெற்றுத் தந்ததாக பாலாஜி ஸ்ரீராம் நன்றியுடன் கூறினார்.

இயக்குநர் சசி பேசுகையில், இந்தப் படத்தின் கதை ஒரு தாய் மற்றும் மகனின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து உருவானதாக தெரிவித்தார். ‘பிச்சைக்காரன்’ படத்தில் தாயை தெய்வமாக பார்த்த மகனின் கதையை சொன்னோம். ‘நூறு சாமி’யில் தாயை ஒரு மனிதராக பார்க்கும் மகனின் கதையை சொல்கிறோம் என்று கூறிய அவர், படம் பார்த்த பிறகு அனைவரும் தங்களது தாயை புதிய பார்வையில் காண்பார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி, தனது திரைப்பயணத்தில் முக்கியமான மூன்று திருப்புமுனைகளில் ஒன்றாக ‘நூறு சாமி’ அமையும் என்று குறிப்பிட்டார். பெண்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டிய திரைப்படமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஃபீல்-குட் கமர்ஷியல் குடும்பப் படமாக உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் வரும் ஜூன் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களின் பாராட்டுகள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.