மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் மர்மம் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியிருக்கும் இப்படத்தின் டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தை இயக்குநர் அட்லி வழங்குகிறார். ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
இரண்டு சிறுவர்கள் ரௌடி பத்தாவின் வீரத்தைப் பற்றி பேசுவதுடன் டிரெய்லர் தொடங்குகிறது. யாராலும் எதிர்த்து நிற்க முடியாத நபராக பத்தா சித்தரிக்கப்படுகிறார். தொடர்ந்து இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள், அவரை ஒரு வலிமையான ரௌடியாக அறிமுகப்படுத்துகின்றன.
ஆனால், பத்தாவின் வாழ்க்கையில் ரௌடி என்ற அடையாளம் மட்டுமல்லாமல் மற்றொரு பக்கமும் இருப்பதை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் அவரது குடும்ப வாழ்க்கை அறிமுகமாக, இதுவரை காட்டப்பட்ட கதாபாத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட மனிதராக விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தோன்றுகிறது.
ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் தொடங்கும் டிரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளில் நகைச்சுவைக்கும் குடும்ப உறவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. பத்தாவை சுற்றியுள்ள மனிதர்கள், அவர்களுடனான உறவுகள் மற்றும் அவரது வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் என கதையின் பல்வேறு பரிமாணங்கள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக டிரெய்லரின் இறுதியில் இடம்பெறும் ‘செல்லமே மகளே’ பாடல் காட்சிகள் கதையின் உணர்வுப்பூர்வமான பகுதியை வெளிப்படுத்துகின்றன. “அப்பா வந்திருவார்ல அம்மா?” என்று சிறுமி கேட்கும் காட்சியும், அதனைத் தொடர்ந்து சிறையில் இருக்கும் பத்தா காட்டப்படுவதும் அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்புகிறது.
1980களின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் காலகட்டத்தையும் டிரெய்லர் சிறப்பாக பிரதிபலிக்கிறது. அக்காலத்தை பிரதிபலிக்கும் ஆடை வடிவமைப்பு, காட்சியமைப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவை படத்தின் உலகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது தெரிகிறது.
பத்தா உண்மையில் யார், அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம் என்ன, ரௌடியாக அறிமுகமாகும் அவர் எப்படி குடும்பஸ்தனாக மாறுகிறார், இறுதியில் அவர் ஏன் சிறைக்குச் செல்கிறார் போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் டிரெய்லர் நிறைவடைகிறது. இதன் மூலம் படத்தின் முக்கிய கதைக்களத்தை வெளிப்படுத்தாமல் ரசிகர்களின் ஆர்வத்தை படக்குழு தக்க வைத்துள்ளது.
‘பத்தா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ஜெய் பீம்’ புகழ் லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவையும், ஆர். கலைவாணன் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இப்படத்தை முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வு மற்றும் மர்மம் ஆகியவற்றுடன் 80களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பத்தா’, வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


