சாமானிய மனிதனின் உரிமைகள், அவற்றைச் சுற்றியுள்ள சமூகப் பிரச்சினைகள் என ஒரு முக்கியமான விஷயத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் லெனின் பாண்டியன். ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடர்புடைய ஒரு கருத்தை எளிமையாகவும் புரியக்கூடிய வகையிலும் சொல்ல முயற்சித்திருப்பதே இப்படத்தின் முக்கிய பலம்.
அறிமுக நாயகன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக நடித்துள்ளார். அறிமுகப் படத்திலேயே கதாபாத்திரத்தை நம்பிக்கையுடன் கையாளும் தர்ஷன், தனது நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். இளம் கதாநாயகர்களுக்கான வரிசையில் நம்பிக்கைக்குரிய நடிகராக உருவாகக்கூடிய திறமை அவரிடம் இருப்பதை இப்படம் வெளிப்படுத்துகிறது. கதாநாயகியாக நடித்துள்ள ஷ்ரிதா ராவும் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்துள்ளார்.
கங்கை அமரன், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்துள்ளனர். குறிப்பாக, ரோஜாவின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. தமிழ் சினிமாவில் தனது ஆரம்ப காலங்களில் ரசிகர்களை கவர்ந்த தனது அழுத்தமான நடிப்பை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் ரோஜா சிறப்பாக நடித்துள்ளார். கதாபாத்திரத்தின் உணர்வுகளை தனது அனுபவம் கலந்த நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
நீதிபதி கதாபாத்திரத்தில் வரும் ஜார்ஜ் மரியன் தனியாக குறிப்பிடப்பட வேண்டியவர். அதிகப்படியான நடிப்பு இல்லாமல், தனது உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறார். குறிப்பாக, நீதிமன்றக் காட்சிகளில் அவர் பேசும் அழுத்தமான வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. படத்தின் முக்கியமான தருணங்களில் தனது நடிப்பால் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
இயக்குநர் டி.டி. பாலச்சந்திரன் படத்தின் மையக்கருத்தை எளிமையாகக் கொண்டு சென்றிருக்கிறார். சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் குடிமகனின் உரிமைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை காட்சிகளின் வழியாக எடுத்துச் சொல்லியிருப்பது சிறப்பு. கருத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காக படத்தை மிகவும் சிக்கலானதாக மாற்றாமல், நேரடியான கதை சொல்லல் மூலம் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் இசை, ஒளிப்பதிவாளர் ஏ.எம். எட்வின் சகாய், கலை இயக்குநர் ஆதூரி ஜெய்குமார் மற்றும் படத்தொகுப்பாளர் நாகூரன் ராமச்சந்திரன் ஆகியோரின் பணிகள் கதைக்கு தேவையான அளவில் துணை நிற்கின்றன. இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றில் தனித்துவமாக குறிப்பிட்டு சொல்லக்கூடிய அம்சங்கள் அதிகம் இல்லாவிட்டாலும், அந்தந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது பணியை சிறப்பாகச் செய்துள்ளனர்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர். இயக்குநர் டி.டி. பாலச்சந்திரனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லெனின் பாண்டியன், சமூகத்திற்குத் தேவையான ஒரு கருத்தை எளிய முறையில் எடுத்துச் சொல்லும் முயற்சியாக அமைந்துள்ளது.
மொத்தத்தில், பிரம்மாண்டமான திரை அனுபவத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், ஒரு முக்கியமான சமூகக் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் உருவாகியிருக்கும் படம் லெனின் பாண்டியன். தர்ஷன்கணேசன், ரோஜா, ஜார்ஜ் மரியன் ஆகியோரின் நடிப்பும், இயக்குநர் டி.டி. பாலச்சந்திரனின் எளிமையான கதை சொல்லலும் படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக அமைந்துள்ளன.
ரேட்டிங்: 3.5/5


