சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ள நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் தமிழ் தொடரான ‘#Love’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் காலத்தில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எவ்வாறு மாறியுள்ளன என்பதை நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான அணுகுமுறையுடன் பேசுகிறது.

சென்னையில் நடைபெற்ற ‘#Love’ டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தொடரின் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ், ‘#Love’ நெட்ஃப்ளிக்ஸின் முதல் தமிழ் காதல் டிராமா தொடர் என்றும், தமிழ் படைப்புகளில் வித்தியாசமான கதைக்களங்களையும் தனித்துவமான குரல்களையும் தொடர்ந்து வழங்க நிறுவனம் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

‘#Love’ தொடரின் கதை இரண்டு போட்டியாளர்களான டேட்டிங் ஆப் நிறுவனர்களைச் சுற்றி நகர்கிறது. காதலில் காம்பாட்டிபிலிட்டிதான் முக்கியம் என்று ஒருவர் நம்ப, மற்றொருவர் கெமிஸ்ட்ரியே முக்கியம் என்கிறார். தங்களது கருத்துதான் சரி என்பதை நிரூபிக்க இருவரும் போட்டியிடும் சூழலில், அவர்களது வாழ்க்கையில் காதல் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

இந்தத் தொடரில் மேத்யூ மற்றும் தாரா என்ற கதாபாத்திரங்களில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளனர். FOUND மற்றும் Find My Bae எனும் இரண்டு டேட்டிங் ஆப்களின் நிறுவனர்களாக இருக்கும் தாராவும் மேத்யூவும், மற்றவர்களுக்கு சரியான துணையைத் தேடிக் கொடுப்பதைத் தங்களது தொழிலாகக் கொண்டிருந்தாலும், தங்களுக்கான காதலை கண்டுபிடிப்பதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். போட்டியாளர்களாக இருக்கும் இருவருக்கும் இடையே உருவாகும் உறவும், அதனைத் தொடர்ந்து ஏற்படும் காதல் மற்றும் கருத்து மோதல்களும் தொடரின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.

ஷோ-ரன்னரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், ‘#Love’ தொடரை உருவாக்குவதில் தனக்கு கிடைத்த அனுபவம் குறித்து பேசும்போது, ஒரு நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் தொடரின் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பது மிகப்பெரிய பொறுப்பு எனக் குறிப்பிட்டார். கதையை ஆரம்பம் முதல் இறுதிக்கட்டம் வரை கொண்டு செல்லும் பயணத்தில் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருந்ததாகவும், சரியான நேரத்தில் முடிவெடுப்பதன் முக்கியத்துவத்தை இந்தப் பயணம் தனக்குக் கற்றுக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இயக்குநர் பாலாஜி மோகன், காதல் என்பது முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயம் என்பதால், தொடர்ந்து காதலை மையமாக வைத்து கதைகளை உருவாக்கி வருவதாகக் கூறினார். திரைப்படங்களில் காட்டப்படும் காதலுக்கும் நிஜ வாழ்க்கையில் இருக்கும் உறவுகளுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை கருத்தில் கொண்டு, ‘#Love’ தொடரை நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான உணர்வுகளுடனும், பார்வையாளர்கள் தங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடிய வகையிலும் உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

‘#Love’ தொடரில் தாரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, தன்னுடைய இயல்பான குணாதிசயங்களுடன் தாரா மிகவும் நெருக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கதாபாத்திரமாகவே மாறி நடித்த அனுபவம் தனக்கு மிகவும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், அர்ஜுன் தாஸுடன் இதற்கு முன்பு இணைந்து நடிக்க வேண்டிய வாய்ப்பு தவறிய நிலையில், தற்போது ‘#Love’ மூலம் இருவரும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேத்யூ கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ், அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுப்பூர்வமான மற்றும் பலவீனமான பக்கங்கள் தன்னை அதிகம் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். நிஜ வாழ்க்கையில் மேத்யூ போன்ற ஒருவரை சந்தித்தால், அவரது சாகசங்களைப் பற்றி பேசுவதற்காக நட்பு வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காதலில் கெமிஸ்ட்ரியா அல்லது காம்பாட்டிபிலிட்டியா முக்கியம் என்ற கேள்விக்கு இருவரும் தங்களது பார்வையைப் பகிர்ந்துகொண்டனர். அர்ஜுன் தாஸ், ஒரு உறவு நீண்ட காலம் தொடர காம்பாட்டிபிலிட்டி முக்கியம் என்ற கருத்தைத் தெரிவித்தார். அதேவேளையில், ஐஸ்வர்யா லட்சுமி கெமிஸ்ட்ரி முதலில் உருவாகி, அதன் மூலம் காம்பாட்டிபிலிட்டியை நோக்கி உறவு நகரும் என்று தனது பார்வையைத் தெரிவித்தார்.

இன்றைய காலகட்டத்தில் காதல் என்பது நேரடியாக சந்திப்பதிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை. ஸ்வைப், மேட்ச், மெசேஜ் என டேட்டிங் ஆப்கள் வழியாகவே பல உறவுகள் தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த மாற்றத்தையும், நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகளையும் மையமாக வைத்தே ‘#Love’ தொடர் உருவாகியுள்ளது.

‘காதலில் சொதப்புவது எப்படி?’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’, ‘மாரி 2’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள பாலாஜி மோகன், இளைஞர்களின் வாழ்க்கை, காதல் மற்றும் உறவுகளை தனக்கே உரிய நகைச்சுவை கலந்த பாணியில் அணுகியவர். அந்த வரிசையில் ‘#Love’ தொடரும் நவீன காதலை மையமாகக் கொண்ட புதிய களமாக அமைந்துள்ளது.

நிர்மல் வில்லியம்ஸ் எழுதியுள்ள இந்தத் தொடருக்கு ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, சாய் முத்துராமன் மற்றும் சிவா எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளனர். May6 Entertainment Factory நிறுவனம் தொடரைத் தயாரித்துள்ளது.

டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணி, பாலாஜி மோகனின் காதல் குறித்த பார்வை மற்றும் ‘கெமிஸ்ட்ரியா… காம்பாட்டிபிலிட்டியா?’ என்ற மையக் கேள்விக்கு தொடர் வழங்கும் பதில் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காதல், நட்பு, குடும்பம், லட்சியம் மற்றும் நவீன உறவுகளின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் ‘#Love’ தொடர் அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.