மகாபாரதத்தின் புகழ்பெற்ற மாவீரர்களில் ஒருவரான கர்ணனின் காவிய வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய பிரம்மாண்ட திரைப்படம் ‘மஹாவீர் கர்ணா’. இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், மஹாவீர் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார்.

பென் மூவீஸ் நிறுவனத்தின் ஜெயந்திலால் கடா வழங்கும் இப்படத்தை ஆர்வி ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றன. சுமார் ரூ.150 கோடி பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட உள்ளது.

கர்ணனின் வாழ்க்கை, அவரது வீரமும், கௌரவமும், விசுவாசமும், தியாகமும் என பல்வேறு உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மிகப்பெரிய திரை அனுபவமாக ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் இயக்குநர் ரமேஷ் வர்மா படத்தை உருவாக்கி வருகிறார்.

படத்தின் பிரம்மாண்டத்துக்கு ஏற்ப பிரத்தியேகமாக அமைக்கப்படும் அரங்குகள், புராண காலத்தை பிரதிபலிக்கும் கலை வடிவமைப்புகள், பிரம்மாண்டமான போர் காட்சிகள் மற்றும் உலகத்தர VFX தொழில்நுட்பம் ஆகியவை ‘மஹாவீர் கர்ணா’ படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக அமையவுள்ளன. பழங்கால அரசாட்சிகள், போர்க்களங்கள் மற்றும் பிரம்மாண்டமான உலகத்தை திரையில் உருவாக்கும் வகையில் நேரடி அரங்க அமைப்புகளுடன் நவீன VFX தொழில்நுட்பமும் இணைக்கப்பட உள்ளது.

மகாபாரதத்தில் அழியாத இடம்பிடித்த கர்ணனின் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கர்ணனின் வீரத்தையும், அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற உணர்வுப்பூர்வமான தருணங்களையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளுடன் இணைத்து படமாக்க இயக்குநர் ரமேஷ் வர்மா திட்டமிட்டுள்ளார்.

‘மஹாவீர் கர்ணா’ படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“உச்சம் தொடப் பிறந்த வீரன்; அவரது காவியம் என்றும் வாழும்” என்ற அடிப்படையில் உருவாகும் ‘மஹாவீர் கர்ணா’, கர்ணனின் உலகத்தை ரசிகர்களின் கண்முன் கொண்டு வர இருக்கிறது.

ராகவா லாரன்ஸ் மஹாவீர் கர்ணனாக நடிக்கும் இப்படம் 2027ஆம் ஆண்டு உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.