‘ஞானச்செருக்கு’ மற்றும் ‘யாத்திசை’ திரைப்படங்கள் மூலம் தனித்துவமான திரைமொழிக்காக கவனம் பெற்ற இயக்குநர் தரணி ரசேந்திரன் தனது புதிய திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளார். நடிகர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தற்போது பிந்தைய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இரண்டாம் உலகப்போரைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது முழுமையான படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்துள்ளது. படத்தின் உலகத்தை நம்பகத்தன்மையுடன் உருவாக்குவதற்காக ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை, ஆடை வடிவமைப்பு, செட் அமைப்பு, சண்டைக் காட்சிகள், VFX மற்றும் நடிகர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய அளவில் திட்டமிடல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மீண்டும் படப்பிடிப்பு நடத்தும் வசதி இல்லாத சூழலில் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த கவனத்துடனும் அழுத்தத்துடனும் உருவாக்கப்பட்டதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். சர்வதேச தரத்தில் காட்சிகளை உருவாக்க வேண்டும் என்பதே படக்குழுவின் முக்கிய கனவாக இருந்ததாகவும், அதற்கான பொருளாதார சவால்களை சமநிலைப்படுத்தியே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமான திரைப்பட அனுபவங்களைத் தாண்டி புதிய களங்களில் கதைகளை சொல்ல வேண்டும் என்ற விருப்பம் தான் இந்த முயற்சியின் அடிப்படை எனவும், அதற்காக நீண்டகால உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் நான்கு முதல் ஐந்து மாதங்களில் படம் முழுமை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அடுத்த கட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


