ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடிச்சு சாம் C S இசையமைத்து, வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். குடும்ப கஷ்டம் காரணமாக தன் சொந்த ஊரான புதுக்கோட்டையை விட்டுவிட்டு சென்னைக்குச் சென்ற ஷேன் நிகாம், சொந்த ஊரில் தான் காதலித்த பெண்ணை ஆடம்பரமாக கல்யாணம் பண்ண ஆசைப்படுகிறார். கல்யாண வேலைகள் எல்லாம் தடல் புடளாக நடக்கும் வேலையில், காதலியின் வேண்டுகோளின் பெயரில், காதலியை பார்க்கச் செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் கர்ப்பிணிப் பெண்ணான ஐஸ்வர்யா தத்தாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை இறந்து விடுகிறது. இதனால் கடுப்பான அவரது கணவர் கலையரசன் ஷேன் நிகாமை கொலை செய்ய பழிவாங்க முயற்சி செய்கிறார். இந்நிலையில் ஷேன் நிகாமுக்கு கல்யாணம் நடந்ததா? இல்லையா? என்று பல திருப்பங்களுடன் சொல்லும் கதை தான் மெட்ராஸ் காரன். rdx படத்தின் மூலம் புகழ்பெற்ற ஷேன் நிகாம் இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கலையரசன் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா தத்தா அவருக்கு எப்பொழுதுமே பாவப்பட்ட கேரக்டர் தான் போல, இந்த படத்திலும் அதே மாதிரியான ஒரு கேரக்டர் தான். நிஹாரிகா காதல் தேவதை போல் வந்து சென்றுள்ளார். படத்தின் கதை கரு மெல்லிய சிறு லைன் தான் என்றாலும் அதை காட்சிப்படுத்திய விதம் மிகவும் அருமை. குறிப்பாக முதல் பாதி போன வேகம் தெரியவில்லை இரண்டாம் பாதியில் சற்று சறுக்கல் நிறைய குழப்பங்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு மிக மிக நேர்த்தியாக உள்ளது ஒளிப்பதிவாளருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். இசையமைப்பாளர் சாம் C S தனது தத்ரூபமான பின்னணி இசையால் நாற்காலி முனையில் அமர வைத்து விடுகிறார் என்றே சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் இயக்குனர் இதற்கு முன்னால் ரங்கோலி என்ற படத்தை இயக்கியுள்ளார். அது வியாபார ரீதியாக பெரிதாக போகவில்லை என்றாலும், பரவலாக பேசப்பட்ட படம். இந்தப் படத்திற்கு மெட்ராஸ்காரன் என்று டைட்டில் ஏன் வைத்தார் என்று தான் புரியவில்லை. மற்றபடி கதையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். பொங்கல் திருநாள் அன்று சில பல பெரிய படங்கள் வெளிவந்தாலும் இயக்குனரும் தயாரிப்பாளரும் கதையை மட்டுமே நம்பி இந்த படத்தை வெளியிட்டு இருப்பது அவர்களின் மன உறுதிக்கு சான்று. இந்தக் கதையை ரசிகர்கள் நிச்சயம் பார்க்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது ஆக மொத்தத்தில் மெட்ராஸ் காரன் படம், படத்தின் டைட்டில் தான் தவறே தவிர படம் தவறான படம் அல்ல.