கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் அரசியல் பின்னணியிலான ஆக்ஷன் திரைப்படம் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இயக்குநர் ராஜு முருகனின் முன்னாள் உதவியாளரான தீனா ராகவன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஏற்கனவே வெளியான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அரசியல் மற்றும் ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான கதைக்களம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. குறிப்பாக ராஜு முருகன் எழுதிய வசனங்கள் மற்றும் டீசரில் இடம்பெற்ற தீவிர அரசியல் சாயல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்தப் படத்தில் கௌதம் ராம் கார்த்திக் மாறுபட்ட மற்றும் சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக அஞ்சனா நேத்ருன் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் செல்வராகவன், பி.வாசு, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘Draft by GKB’ நிறுவனம் சார்பில் கணேஷ் கே.பாபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சஞ்சய் முத்துக்குமார் வி இணை தயாரிப்பாளராக உள்ளார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தீபக் எஸ் படத்தொகுப்பையும், தா.ராமலிங்கம் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
அரசியல், அதிரடி, உணர்ச்சி என பல அம்சங்களை இணைத்து உருவாகும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


