நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ள கிரைம் திரில்லர் திரைப்படமான ‘அந்தரன்’ வரும் ஜூன் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி சென்னை நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தின் சிறப்பம்சங்களை பகிர்ந்து கொண்டனர்.
ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு.கி. சாம்பசிவம் தயாரித்துள்ள இப்படத்தை சந்தோஷ் ராவணன் இயக்கியுள்ளார். பிரஜினுடன் இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹரி எஸ்.ஆர் இசையமைத்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சந்தோஷ் ராவணன், ‘அந்தரன்’ என்பது சாதாரண கிரைம் திரில்லர் அல்ல என்றும், தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்றும் தெரிவித்தார். படத்தின் மையக்கருவை தற்போது வெளிப்படுத்த முடியாது என்றாலும், ரசிகர்கள் திரையரங்கில் படம் பார்க்கும் போது அதன் தீவிரத்தையும் தனித்துவத்தையும் உணர்வார்கள் என கூறினார்.
மேலும், ‘போர் தொழில்’, ‘ராட்சசன்’, ‘தெகிடி’ போன்ற படங்களில் இருந்ததைப் போலவே, இந்தப் படத்தின் கிளைமாக்ஸிலும் யாரும் எதிர்பார்க்காத ஒரு முக்கிய திருப்பம் இருப்பதாகவும், அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். திரில்லர் கதைக்களமாக இருந்தாலும், காதல் அம்சங்களும் படத்தில் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்படத்தின் நாயகி இவானா வருண், இது தனது முதல் திரைப்படம் என்பதால் மிகவும் சிறப்பான அனுபவமாக அமைந்ததாக தெரிவித்தார். படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த ஆதரவும், அன்பும் மறக்க முடியாதவை என்றும், ரசிகர்கள் அனைவரும் ஜூன் 25-ஆம் தேதி திரையரங்குகளில் படம் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தயாரிப்பாளர் சி.வி. குமார் பேசுகையில், படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டதாகவும், கடைசி வரை கதையின் போக்கை கணிக்க முடியாத வகையில் சுவாரஸ்யமாக இயக்குநர் உருவாக்கியிருப்பதாகவும் பாராட்டினார். நல்ல உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள் என்பதால், ‘அந்தரன்’ நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம், ‘அடவி’, ‘மனிதர்கள்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘அந்தரன்’ தனது மூன்றாவது தயாரிப்பாகும் என்றும், சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கியமான கருத்தை கிரைம் திரில்லர் வடிவில் சொல்ல முயற்சித்திருப்பதாகவும் கூறினார். அதேசமயம் புதிய படைப்பாளிகள் மற்றும் புதுமுகங்களின் படங்களுக்கு விநியோகஸ்தர்கள், ஓடிடி தளங்கள் மற்றும் திரையுலக வணிக வட்டாரங்கள் கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
நாயகன் பிரஜின் பேசுகையில், கடந்த இருபது ஆண்டுகளாக தனது திரைப்பயணத்தில் ஒரு பெரிய திருப்புமுனையை எதிர்நோக்கி வருவதாகவும், அந்த மாற்றத்தை ‘அந்தரன்’ நிச்சயமாக ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். ரசிகர்கள் செலவிடும் பணத்திற்கும், நேரத்திற்கும் முழு மதிப்பளிக்கும் தரமான படைப்பாக இப்படம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
பிக் பாஸ் பிரபலங்கள் விக்ரம், சபரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பரபரப்பும், மர்மமும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த கிரைம் திரில்லராக உருவாகியுள்ள ‘அந்தரன்’ திரைப்படம் ஜூன் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


