ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் வரும் மே 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னை நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் சிறப்புகளை பகிர்ந்துகொண்டனர்.

குடும்ப உணர்வுகளுடன் கூடிய ஆக்ஷன் எண்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த திரைப்படம் சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்துக்களையும் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லவுள்ளதாக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் தெரிவித்தார். தனது முதல் படத்திலேயே அர்ஜுனை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமை என கூறிய அவர், “இந்த படம் எல்லா அப்பாக்களையும் மனதளவில் இணைக்கும். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய திரைப்படம் இது” என்றார்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில், தமிழ் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட நாட்களாக இருந்ததாகவும், ‘பிளாஸ்ட்’ படத்தின் கதை அவரை மிகவும் கவர்ந்ததாகவும் கூறினார். “இந்த படத்திற்காக முற்றிலும் புதிய இசை அணுகுமுறையை முயற்சி செய்திருக்கிறேன். சர்வதேச அளவிலான இசைக் கலைஞர்களும் இதில் பணியாற்றியுள்ளனர். இது என் இசைப் பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன், இந்த படம் தனது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளதாக கூறினார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சக்திவாய்ந்த ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்தது பெருமை என குறிப்பிட்ட அவர், சண்டைக் காட்சிகளில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது என்றார்.

அதேபோல் நடிகை அபிராமி, 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அர்ஜுனுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்தார். “பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் மிகவும் குறைவு. ஆனால் ‘பிளாஸ்ட்’ அதில் மாறுபட்ட படம். ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு புதிய அனுபவம்” என்று கூறினார்.

கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், “பெண்களின் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு திறனின் அவசியத்தை பேசும் திரைப்படம் இது. ஒரு பெண் குழந்தையை எப்படி தைரியமாக வளர்க்க வேண்டும் என்பதையும் இந்த படம் சொல்கிறது” என்றார். மேலும், இப்படத்தில் அர்ஜுன் நடித்தது படத்திற்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நடிகர் அர்ஜுன் பேசும்போது, “எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்திருக்கிறேன். இயக்குநர் சுபாஷின் தன்னம்பிக்கை மற்றும் வேலை வாங்கும் திறமை என்னை ஆச்சரியப்படுத்தியது” என்று பாராட்டினார். படக்குழுவின் அர்ப்பணிப்பும், இளம் கலைஞர்களின் உழைப்பும் இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்றும் அவர் கூறினார்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். வீரமணி கணேசன் கலை இயக்கத்தை கவனித்துள்ள நிலையில், சண்டைக் காட்சிகளுக்கு பீனிக்ஸ் பிரபு பணியாற்றியுள்ளார். குடும்ப உணர்வுகள், பெண்களின் தற்காப்பு, அதிரடி ஆக்ஷன் மற்றும் வலுவான இசையுடன் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.