
uncategorized ➔ kollywood newsBy Sumithra Dorai|2023-11-08
பார் சாங்கில் மகாகவியின் வரிகள்! இழிவுப்படுத்தப்பட்ட பாரதியார்!!
எஸ்குயர் புரொடக்ஷன்ஸ் யுகே (Esquire Productions UK) மற்றும் புன்னகை பூ கீதா தயாரிப்பில், வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "சில நொடிகளில்".
முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் முக்கோண காதல் கதையாகவும், க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லராகவும் உருவாகியுள்ளது.
படம் குறித்து நடிகர் ரிச்சர்ட் ரிஷி கூறுகையில்,
“தொடர்ந்து இரண்டு வெற்றிகளை கொடுத்த பிறகும் சிறு இடைவெளி எடுத்துக்கொண்டதற்கு காரணம், கதை தேர்வு தான். இந்த ஒரு வருடத்தில் என்னை தேடி நிறைய கதைகள் வந்தன. வித்தியாசமான அல்லது புதிய ஜானர் கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அந்த சமயத்தில் தான் வினய் இந்த கதையை என்னிடம் சொல்லி திரைக்கதையை கொடுத்தார், படித்து பார்த்ததும் வித்தியாசமாக இருந்ததோடு, ஆங்கிலப் பட பாணியில் ஸ்டைலிஷாகவும் இருந்தது. அதே சமயம், நமது கலாச்சாரத்தை தொடர்பு படுத்துவதுபோலும் கதை இருந்ததால் உடனே சம்மதம் சொல்லிவிட்டேன். இந்த மாதிரி கதைக்காக தான் ஒரு வருடம் காத்திருந்தேன்.
கதை முழுக்க முழுக்க லண்டனில் நடக்கிறது. இந்தியாவை விட்டுவிட்டு லண்டனை கதைக்களமாக தேர்வு செய்ததற்கு காரணம், படத்திற்கு புதிய லுக் ஒன்றை கொடுப்பதற்காக தான். அதுமட்டும் அல்ல, இந்த கதை சர்வதேச அளவில் இருப்பதாலும், என்னுடைய கதாபாத்திரம் காஸ்மட்டிக் சர்ஜன், யாஷிகா ஆனந்தின் கதாபாத்திரம் மாடல் என்பதால், இதுபோன்ற துறைகளில் லண்டன், பிரான்ஸ் போன்ற இடங்கள் தான் முன்னிலையில் இருப்பதால் கதைக்களம் லண்டனாக தேர்வு செய்தோம்.
புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் மற்றும் என்னுடைய கதாபாத்திரம் என மூன்று பேரை சுற்றி தான் கதை நடக்கும். படம் தொடங்கி முக்கோண காதல் கதைபோல் பயணிக்கும், பிறகு மர்டர் மிஸ்டரி மற்றும் க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படமாக மாறும், அதாவது நொடிப் பொழுதில் ஒருவரது வாழ்க்கை நினைத்து பார்க்காதபடி மாறிவிடும், அதனால் தான் ‘சில நொடிகளில்’ என்று தலைப்பு வைத்திருக்கிறோம். நிச்சயம் ஒரு வித்தியாசமான படமாக மட்டும் இன்றி, ரசிகர்களை எண்டர்டெயின் பண்ண கூடிய படமாக இருப்பதோடு, என்னை வேறு மாதிரியாக காட்டும் படமாக இருக்கும்.” என்றார்.
இயக்குநர் வினய் பரத்வாஜ் படம் பற்றி கூறுகையில்,
“ரிச்சர்ட் சொன்னது போல் ‘சில நொடிகள்’ ஸ்டைலிஷான படமாக மட்டும் இன்றி தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய படமாக இருக்கும். இந்த படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகத்தில் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். பின்னணி இசையும் பேசப்படும் விதத்தில் இருக்கும். ரிச்சர்ட் ரிஷி ஒரு காஸ்மட்டிக் சர்ஜன், அவர் வாழ்க்கையில் பல மாடல் அழகிகளை சந்திக்கிறார். அப்படி ஒருவர் தான் யாஷிகா ஆனந்த், இவருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் தம்பதியான ரிச்சர்ட் - புன்னகை பூ கீதா வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது, அதனால் வரும் பிரச்சனைகள் என்று படம் பயணிக்கும்.
ரிச்சர்ட், யாஷிகா, புன்னகை பூ கீதா இந்த மூன்று பேரை சுற்றி தான் கதை நடக்கும். இவர்களை தவிர லண்டனை சேர்ந்த சில நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு மக்கள் திரையரங்கிற்கு வந்து ஒரு படத்தை பார்க்கிறார்கள் என்றால் அது கதையளவில் மட்டும் சிறப்பாக இருந்தால் போதாது, தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. திரையரங்கில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புதுவித உணர்வை கொடுக்க வேண்டும், அதுபோன்ற படங்களை தான் மக்களும் விரும்புகிறார்கள்.
படத்தின் பணிகள் முடிந்துவிட்டது. தற்போது “ஆசை முகம்” என்ற பாடலை வெளியிட்டுள்ளோம், அது நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் இரண்டாவது பாடலை வெளியிட இருக்கிறோம். அதை தொடர்ந்து படத்தின் முன்னோட்டத்தை விரைவில் வெளியிட இருக்கிறோம்.” என்றார்.
இந்த "ஆசை முகம்" என தொடங்கும் பாடலை மதுபான பப்பில் காட்சி அமைத்துள்ளனர். அந்த காட்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் மது அருந்திக்கொண்டு நடனம் ஆடுவதை போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாடலை கவிஞர் மகாகவி பாரதியார் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாபெரும் கவிஞரின் பாடலை இப்படி தரம்தாழ்த்தி காட்சிப்படுத்துவது என்பது பாரதியாரை இழிவுப்படுத்தும் செயலாகவே தெரிகிறது.
ஐந்து இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி வேலைகளில் ஈடுபட்டுள்ளது படக்குழு. படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.
