மலையாள திரையுலகின் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகக் கருதப்படும் துல்கர் சல்மான் நடித்துள்ள I'm Game திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படைப்பாகக் கருதப்படுகிறது.
Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஃபேன்டஸி திரில்லர் படத்தை RDX படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளியான டிரெய்லர், கண்கவர் காட்சிகள், அதிரடியான ஆக்ஷன், வேகமான சேஸ் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன் இல்லாத அளவிற்கு ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் தோற்றத்தில் துல்கர் சல்மான் தோன்றியிருப்பதும் டிரெய்லரின் முக்கிய சிறப்பாக அமைந்துள்ளது.
தென்னிந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது டிரெய்லரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
ஜீ மியூசிக் இசை உரிமையை பெற்றுள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். டிரெய்லரில் அவரது பின்னணி இசையும், ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன. அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ள சண்டைக் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை கவர்கின்றன.
துல்கர் சல்மானின் 40-வது திரைப்படமான I'm Game, மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக ஆகஸ்ட் 20 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


