குடும்ப கதைகளையும் நகைச்சுவையையும் ரசிகர்களின் மனதில் பதிய வைக்கும் இயக்குநர் பாண்டிராஜ், இந்த முறை திரில்லர் கலந்த காமெடி டிராமா ஜானரில் ‘பரிமளா & கோ’ படத்தை உருவாக்கியுள்ளார். ‘தலைவன் தலைவி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் இயக்கும் 12வது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் கோலகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினரும் பல திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு பட அனுபவங்களை பகிர்ந்தனர். தயாரிப்பாளர் ஜி.கே.எம் தமிழ்குமரன் பேசும்போது, “இந்த படத்தை முழுமையாக பாண்டிராஜ் சாரின் கைகளில் நம்பிக்கையுடன் ஒப்படைத்தோம். அவரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம்” என்று பாராட்டினார்.

நடிகர் செண்ட்ராயன், “பாண்டிராஜ் படங்கள் என்றாலே குடும்பம் முழுவதும் சேர்ந்து ரசிக்கும் படங்கள். அதேபோல் ‘பரிமளா & கோ’வும் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் பார்க்க வேண்டிய படமாக இருக்கும்” என்றார். நடிகர் ஆதித்யா, பாண்டிராஜின் பொறுமையையும் நடிகர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை எடுக்கும் திறமையையும் புகழ்ந்தார்.

நடிகைகள் காயத்திரி, அனந்திகா, பூர்ணிமா ரவி மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், இப்படத்தில் நடித்த அனுபவம் கனவு நனவானது போல இருந்ததாக கூறினர். குறிப்பாக படப்பிடிப்பு தளம் ஒரு குடும்பம் போல இருந்ததாகவும் தெரிவித்தனர்.

சாண்டி மாஸ்டர் பேசும்போது, “ஜெயராம் சார், ஊர்வசி மேடம், மிஷ்கின் சார் ஆகியோருடன் சேர்ந்து நடித்தது மிகப்பெரிய அனுபவம். இந்த படத்தில் மிஸ்டரி, காமெடி, எமோஷன் என அனைத்தும் இருக்கும்” என்றார்.

நடிகை ஊர்வசி, “இந்த கதையை கேட்டவுடன் இது ஒரு ஸ்பெஷலான படம் என்று தோன்றியது. பல வருடங்களுக்கு பிறகு ஜெயராமுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒவ்வொரு காட்சியும் புதிதாகவும் இயல்பாகவும் அமைந்துள்ளது” என்று தெரிவித்தார். ஜெயராமும், “இந்த படத்தின் உண்மையான ஹீரோ திரைக்கதை தான்” என பாராட்டினார்.

இயக்குநர் மிஷ்கின், பாண்டிராஜின் எழுத்து மற்றும் மொழி பாணியை புகழ்ந்து பேசினார். “மக்கள் பேசும் இயல்பான மொழியை திரையில் உயிரோடு கொண்டு வரக்கூடிய திறமை பாண்டிராஜுக்கு இருக்கிறது” என்று அவர் கூறினார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது, “‘பரிமளா & கோ’ கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது. ஜெயராம் – ஊர்வசி கூட்டணி இந்த கதைக்குள் வந்ததும் படம் பாதி வெற்றி பெற்றுவிட்டது என்று நினைத்தேன்” என்றார். மேலும், சஞ்சனா மற்றும் அனந்திகா உண்மையான அக்கா-தங்கைகள் போலவே நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘பரிமளா & கோ’ படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தை மையமாக கொண்டு நகர்கிறது. சென்னை, கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு பின்னணியில் நகரும் இந்த திரைப்படம், திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும் ரசிகர்களை கவரவுள்ளது.

ஜெயராம், ஊர்வசி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி, அனந்திகா, யோகி பாபு, மிஷ்கின், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். 'தமிழ்க்குமரன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' மற்றும் 'பசங்க புரொடக்ஷன்ஸ்' இணைந்து தயாரிக்கின்றன.

ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு Foxn இசையமைத்துள்ளார். குடும்ப பொழுதுபோக்குடன் திரில்லர் சுவையையும் இணைத்து உருவாகியுள்ள ‘பரிமளா & கோ’ ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.