கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள மர்ம கிரைம் திரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. தொலைக்காட்சி நடிகர் சித்து கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஐந்து கொலைகள் எந்தத் தடயமும் இன்றி ஒரே மாதிரியாக நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். தயாரிப்பாளர்கள் பேசும்போது, தரமான திரைப்படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்க வேண்டியது அவசியம் என்றும், தரமற்ற படங்களின் வருகையால் திறமையான இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இயக்குநர் பாலாஜியின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் தான் தங்களை தயாரிப்பிலும் இணைந்து பயணிக்க வைத்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி, முதலில் இயக்குநர் பாலாஜியின் கனவு மீது மட்டுமே நம்பிக்கை வைத்து படத்தில் நடித்ததாகவும், ஆனால் ட்ரெய்லரை பார்த்த பிறகு இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை ஏற்பட்டதாகவும் கூறினார். இயக்குநர் மித்ரன், சினிமாவுக்கு ஒருவர் கொடுக்கும் உழைப்பை சினிமா ஒருநாள் திருப்பிக் கொடுக்கும் என்றும், இதுபோன்ற புதிய முயற்சிகளுக்கு ஊடகங்களும் ரசிகர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நடிகை ரித்விகா, படத்தின் பெரும்பாலான பகுதிகள் மீண்டும் படமாக்கப்பட்டு அதே இடங்களில் மறுபடியும் உருவாக்கப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டு, தினமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் இயக்குநர் பாலாஜி விடாமுயற்சியுடன் படத்தை நிறைவு செய்தது மிகப்பெரிய சாதனை என்றார். நல்ல கதைகளைக் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும், அதே வரிசையில் ‘தி டார்க் ஹெவன்’வும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இயக்குநர் பாலாஜி பேசுகையில், பலர் தன்னையும் தனது படத்தையும் சந்தேகத்துடன் பார்த்தபோதிலும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தன் மீது வைத்த நம்பிக்கையால் தான் இந்தப் படத்தை முழுமைப்படுத்த முடிந்ததாக தெரிவித்தார். தமிழ் பேசும் நடிகர்களை அதிக அளவில் இணைத்து இயல்பான திரைப்படத்தை உருவாக்க முயன்றதாகவும், அனைவரின் ஒத்துழைப்பும் இப்படத்தின் பலமாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.

கதாநாயகன் சித்து, தனது வாழ்க்கையில் மிக முக்கியமான வாய்ப்பாக ‘தி டார்க் ஹெவன்’ அமைந்துள்ளதாகவும், படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஒளிப்பதிவை மணிகண்டன் பி.கே. மேற்கொண்டுள்ள இப்படத்திற்கு ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்ள இந்த மர்ம கிரைம் திரில்லர் திரைப்படம் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.