நடிகர் சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வதந்தி சீசன் டூ – தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடர் ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள இந்த கிரைம் த்ரில்லர் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் சசிகுமார், யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி, இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

பேசிய தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி, முதல் சீசனுக்கே திரைக்கதை எழுதிக் கொண்டிருந்தபோதே இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இரண்டாம் சீசனுக்கான கதைக் கருவை உருவாக்கியிருந்ததாக தெரிவித்தனர். மதுரை பின்னணியில் நடைபெறும் கதையை நம்பகமாக உருவாக்க பல மாதங்கள் அங்கிருந்த மக்களுடன் பழகி ஆய்வு செய்த பிறகே திரைக்கதை இறுதி செய்யப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். எந்த ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது என்ற கொள்கையுடன் செயல்படும் போலீஸ் அதிகாரி மூஸா ராசாவின் கதை ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பேசுகையில், முதல் சீசன் எதிர்பாராத வெற்றியை பெற்ற நிலையில் இரண்டாவது சீசன் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சுமந்து வருவதாக கூறினார். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே தனது மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும், மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் 43 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற கடினமான படப்பிடிப்பு இந்த தொடரை மேலும் யதார்த்தமாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். எஸ்.ஜே. சூர்யா நடித்த முதல் சீசனின் வெற்றிக்கு நன்றியும் தெரிவித்த அவர், சசிகுமாரை மனதில் வைத்து மூஸா ராசா கதாபாத்திரத்தை மேலும் வலுப்படுத்தியதாக கூறினார்.

நடிகர் சசிகுமார், மதுரை பின்னணியில் அமைந்த கதை என்பதால் தன்னை ரவுடி கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பார்கள் என்று முதலில் நினைத்ததாகவும், ஆனால் போலீஸ் அதிகாரி மூஸா ராசா கதாபாத்திரம் குறித்து கேட்டவுடன் கதையின் மீது முழு நம்பிக்கை ஏற்பட்டதாகவும் கூறினார். வழக்கமான அதிரடி போலீஸ் கதாபாத்திரமாக இல்லாமல் இயல்பான மனிதராக அந்த வேடத்தை வடிவமைத்த இயக்குநரின் அணுகுமுறையே இந்த கதாபாத்திரத்தின் பலம் என்றும் அவர் பாராட்டினார். குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக மட்டுமல்ல, ஒரு நிரபராதியை காப்பாற்ற போராடும் போலீஸ் அதிகாரியின் பார்வையில் கதை நகர்வதே இந்த தொடரின் தனிச்சிறப்பு என்றும் சசிகுமார் குறிப்பிட்டார்.

நடிகர் விவேக் பிரசன்னா, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸின் எழுத்து திறனை பாராட்டியதுடன், தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி வழங்கிய பணிச்சூழல் அனைவருக்கும் குடும்பம் போன்ற அனுபவத்தை அளித்ததாக தெரிவித்தார். புதிய நடிகரான யஷ்வந்த், இந்த தொடரே தனது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளதாக கூறினார்.

நடிகை அபர்ணா தாஸ், ‘டாடா’ திரைப்படத்திற்கு பிறகு தமிழில் வலுவான கதைக்காக காத்திருந்த நிலையில் இந்த தொடரில் ‘சுமையா’ கதாபாத்திரம் கிடைத்தது மகிழ்ச்சியளித்ததாக தெரிவித்தார். அனகா மருதோரா, ஆரம்பத்தில் தயக்கம் இருந்தாலும் இயக்குநரின் விளக்கத்தால் அந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவும், சசிகுமாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம் என்றும் கூறினார்.

இசையமைப்பாளர் சிமோன் கே. கிங், முதல் சீசனுக்கும் இரண்டாவது சீசனுக்கும் முற்றிலும் மாறுபட்ட இசை அணுகுமுறையை பயன்படுத்தியுள்ளதாகவும், இந்த முறை இரண்டு பாடல்களும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

‘வதந்தி சீசன் டூ – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழுடன் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 15-க்கும் மேற்பட்ட மொழிகளின் சப்டைட்டில்களுடன் இந்த இணையத் தொடர் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.