திருச்சியில் பெற்றோருடன் சாதாரண வாழ்க்கை வாழும் இளைஞனாக பிரஷாந்த் பாண்டியராஜ் அறிமுகமாகிறார். பட்டப்படிப்பு முடித்த மகன் அரசு வேலையில் அமர வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அவரது தந்தை பாலாஜி சக்திவேல், பல்வேறு அரசு தேர்வுகளை எழுத வைக்கிறார். பல தோல்விகளுக்குப் பிறகு காவலர் தேர்வில் வெற்றி பெறும் பிரஷாந்த், காவல்துறையில் பணியில் சேர்கிறார்.

வெகுளியான குணம் கொண்ட அவருக்கு, ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் குற்றவாளிகளை தேடும் பொறுப்பை ஆய்வாளர் அருள்தாஸ் வழங்குகிறார். பணியில் இருக்கும் போது ஒரு குற்றவாளி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவரை தாக்கிவிட்டு தப்பிச் செல்லும் சம்பவம், காவல் நிலையத்தில் பிரஷாந்தை கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்குகிறது. அதனால் மனஅழுத்தத்திலும் விரக்தியிலும் தள்ளப்படும் அவர், பின்னர் தன்னம்பிக்கையுடன் மீண்டு தனது திறமையை நிரூபிக்க தொடங்குகிறார்.

இதற்கிடையில் காவல் நிலையத்தில் நடைபெறும் லாக்-அப் மரணம், பிரஷாந்தின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றும் திருப்பமாக மாறுகிறது. அந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அதிலிருந்து வெளிவர அவர் மேற்கொள்ளும் போராட்டமே தொடரின் முக்கியக் கரு.

8 எபிசோடுகளைக் கொண்ட இந்த தொடரில் காதல், குடும்ப பாசம், அதிகார அரசியல், காவல்துறையின் உள்மன அழுத்தங்கள், நையாண்டி, துரோகம் போன்ற பல அம்சங்கள் இயல்பாக கலந்துள்ளன. குறிப்பாக காவல்துறையில் கீழ்மட்டத்தில் பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையை மிக நெருக்கமாக பதிவு செய்ய முயன்றிருப்பது தொடரின் பலமாக அமைந்துள்ளது.

பிரஷாந்த் பாண்டியராஜ் இந்த தொடரின் மூலம் நடிகராகவும் கவனம் ஈர்க்கிறார். அவரது உடல்மொழி, கோபம், விரக்தி, தன்னம்பிக்கை ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் கதாபாத்திரத்துக்கு நம்பகத்தன்மையை கூட்டுகிறது. அருள்தாஸ், பாலாஜி சக்திவேல், சைவம் கலா, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட நடிகர்களும் தங்களது இயல்பான நடிப்பால் காட்சிகளுக்கு வலுசேர்த்துள்ளனர்.

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய தொழில்நுட்ப அம்சங்களும் கதையின் சூழலை உணர வைக்கும் வகையில் அமைந்துள்ளன. சில இடங்களில் லாஜிக் குறைகள் தெரிந்தாலும், அதனை வேகமான திரைக்கதையாலும் இயல்பான இயக்கத்தாலும் சமநிலைப்படுத்தியுள்ளார் இயக்குநர் விக்னேஷ்.

ஆங்காங்கே சில ஆபாச வசனங்கள் இடம்பெறுவதால், பெரியவர்கள் பார்ப்பதற்கு ஏற்ற வெப் சீரிஸாக ‘வாரண்ட்’ அமைந்துள்ளது. காவல்துறையின் மறுபக்கத்தையும், ஒரு சாதாரண காவலரின் மனநிலையையும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கும் இந்த தொடர், கிரைம் டிராமா ரசிகர்களுக்கு நிச்சயம் ஈர்ப்பாக இருக்கும்.