டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் கிளாடி ஜெராடு உருவாக்கியுள்ள “உயிரிணையே” இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னை நகரில் நடைபெற்றது. “உறவுகள்” என்ற கருவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த இசை ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விழாவில் இயக்குநரும் பாடலாசிரியருமான கங்கை அமரன், இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன், தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய கங்கை அமரன், தயாரிப்பாளர் கிளாடி ஜெராடு சமூக உறவுகளின் முக்கியத்துவத்தை புதிய கோணத்தில் வெளிப்படுத்தியிருப்பதாக பாராட்டினார். ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிகர்களை பயன்படுத்தி ஒரு கதையை உருவாக்கியிருப்பது புதிய முயற்சியாக இருந்தாலும், அதே நேரத்தில் அது கலை உலகிற்கு சவால்களையும் உருவாக்கி வருவதாக அவர் கருத்து தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இசைஞானி இளையராஜாவின் இசை வழிகாட்டுதலில்தான் தாங்கள் வளர்ந்ததாகவும், அந்த தலைமுறையில் இசையை ஆழமாக கற்றுக் கொண்ட அனுபவம் இன்று குறைந்து வருவதாகவும் கூறினார். முன்பு ஒரு பாடலை முழுமையாக உணர்ந்து பாடிய காலம் இருந்தது, ஆனால் தற்போது ஒவ்வொரு வரியையும் தனித்தனியாக பதிவு செய்து ஏஐ தொழில்நுட்பத்தில் இணைக்கும் நிலை உருவாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏஐ மீது முழுமையாக நம்பிக்கை வைத்து செயல்படுவது மனிதர்களின் சிந்தனை திறனை பாதிக்கக்கூடும் என்றும், எதிர்கால தலைமுறை தங்களின் சொந்த சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கங்கை அமரன் வலியுறுத்தினார். குழந்தைகள் தங்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் அவர் தெரிவித்தார்.

இசைத்துறையில் ஐம்பது ஆண்டுகளாக பயணித்து வரும் தங்களை தொடர்ந்து நேசித்து ஆதரிக்க வேண்டும் என்றும், “இசையே எங்கள் மூச்சு” என்று உணர்ச்சிபூர்வமாக பேசி கங்கை அமரன் தனது உரையை நிறைவு செய்தார்.