'பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள 'கான் சிட்டி' திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், படத்தின் 25-வது நாள் வெற்றியை முன்னிட்டு படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழாவை கோலாகலமாக நடத்தினர். இதில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பு தரப்பினர் கலந்து கொண்டு, ரசிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.
விழாவில் பேசிய இயக்குநர் ஹரிஷ் துரைராஜ், கொரோனாவுக்குப் பிறகு சிறிய படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெறுவது மிகவும் சவாலான சூழலாக இருந்தாலும், நல்ல உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்களும் ஊடகங்களும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக கூறினார். இந்த வெற்றிக்கு தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அளித்த ஒத்துழைப்பே முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக நடிகர் அர்ஜுன் தாஸ் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செயல்பட்டதை பாராட்டினார்.
நடிகர் அர்ஜுன் தாஸ், படம் வெளியான முதல் காட்சிக்குப் பிறகு ஊடகங்களின் நேர்மையான பாராட்டுகளே படத்தின் வெற்றிக்கான தொடக்கமாக அமைந்ததாக தெரிவித்தார். குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகளிடமிருந்து கிடைத்த வரவேற்பு தன்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்ததாகவும், இந்த வெற்றியின் முழு பெருமையும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜுக்கே சேரும் என்றும் அவர் கூறினார். படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்தார்.
மூத்த நடிகை வடிவுக்கரசி, இந்த படம் தன்னுடைய திரை வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளதாக கூறி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களிடமிருந்து கிடைத்த பாராட்டுகள் மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். மேலும், திறமையான மூத்த கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜ், நடிகர்கள் இமான் அண்ணாச்சி, விடிவி கணேஷ், ஆதித்யா கதிர், கல்கி ராஜா, ரகு, சதா உள்ளிட்ட பலரும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜின் படைப்பாற்றலை பாராட்டியதுடன், படத்தின் வெற்றிக்கு ரசிகர்களும் ஊடகங்களும் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர்.
ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, எதிர்பாராத சூழலில் பணம் அச்சிடும் இயந்திரம் கிடைத்த பிறகு நடைபெறும் சம்பவங்களை நகைச்சுவை, திரில்லர் மற்றும் குடும்ப உணர்வுகளுடன் சொல்லும் 'கான் சிட்டி', அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவுடன் தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.


