நடனப்புயல் பிரபுதேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு இணையும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. KRG கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம், ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவா – வடிவேலு கூட்டணி மீண்டும் திரையில் இணைவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. ஜோம்பி ஜானரை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், ஆக்ஷன், ஹாரர் மற்றும் காமெடி அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வருகிறது. குறிப்பாக பிரபுதேவாவின் ஸ்டைலிஷ் திரை முன்னிலையும், வடிவேலுவின் நகைச்சுவை டைமிங்கும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் முக்கிய பகுதிகள் மலேசியாவில் 10 நாட்கள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தோனேசியாவின் புகழ்பெற்ற Mount Bromo எரிமலைப் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பு காட்சிகளும் படத்தின் முக்கிய ஹைலைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான “பேங் பேங்” டைட்டில் டீஸர் சமூக வலைதளங்களில் வைரலாகி கவனம் பெற்றது. ஜோம்பிகளால் சூழப்பட்ட சூழலில் துப்பாக்கியுடன் மாஸாக தோன்றிய பிரபுதேவா மற்றும் வடிவேலுவின் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. “பிரபு வேலு”, “வடி தேவா” போன்ற ரசிகர்களின் நகைச்சுவை கலந்த கமெண்ட்ஸும் இணையத்தில் டிரெண்டானது.
இப்படத்தை சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு H.C. வேணு ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைக் காட்சிகளை சுரேஷ் வடிவமைக்க, ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். ‘அனிமல்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற Sync Cinema நிறுவனம் சவுண்ட் டிசைன் பணிகளை மேற்கொண்டுள்ளது. அரவிந்த் மேனன் சவுண்ட் மிக்சிங் பணிகளை கவனித்துள்ளார்.
நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பேங் பேங்”, KRG நிறுவனத்தின் நான்காவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வருகிறது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களுக்கு சமூக வலைதளங்களில் ஆர்வம் அதிகரித்துள்ளது.


