ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் இசை ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே வெளியான ‘ஆரா 10/10’ மற்றும் ‘பப்பாளி பழமே’ பாடல்கள் இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது பாடலான ‘கோவிந்தம்மா’ ரசிகர்களின் கவனத்தை முழுமையாக கவர்ந்துள்ளது.
வெளியான சில நாட்களிலேயே இந்த பாடல் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. கிராமிய இசை நுணுக்கங்களையும், நவீன இசை கலவையையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரம்யா ரங்கநாதனுடன் இணைந்து அவர் தோன்றும் காட்சிகள் பாடலுக்கு கூடுதல் வரவேற்பை பெற்றுத்தந்துள்ளன.
பாடலின் வரிகளை ஹிப்ஹாப் தமிழா எழுதியிருப்பதுடன், இசையமைப்பையும் அவர் மேற்கொண்டுள்ளார். கௌஷிக் கிரிஷ், கானா வினோத், கானா உலகம் தரணி மற்றும் கானா சுதாகர் ஆகியோருடன் இணைந்து ஆதியும் இந்த பாடலை பாடியுள்ளார். உற்சாகம் நிரம்பிய நாட்டுப்புற தாளங்கள் மற்றும் கொண்டாட்ட மனநிலையை பிரதிபலிக்கும் இசை அமைப்பு காரணமாக, ‘கோவிந்தம்மா’ பாடல் ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது.
‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், இசை ரீதியாகவும் படக்குழு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது. முதல் பாடலான ‘ஆரா 10/10’ 100 மில்லியன் பார்வைகளை கடந்த நிலையில், இரண்டாவது பாடலான ‘பப்பாளி பழமே’வும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘கோவிந்தம்மா’ பாடலின் வெற்றியால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை குஷ்பூ சுந்தர் மற்றும் ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்துள்ளனர். காதல், காமெடி, இசை மற்றும் மாஸ் அம்சங்கள் கலந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக ‘மீசைய முறுக்கு 2’ உருவாகி வருகிறது.
படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, கேதிகா சர்மா, சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவை கவனித்துள்ள இந்த படத்திற்கு ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ளார். பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பையும், வி.எஸ். தினேஷ் குமார் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
மூன்று பாடல்களும் ரசிகர்களிடம் ஹிட்டாகி வரும் நிலையில், இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக ‘மீசைய முறுக்கு 2’ மாறியுள்ளது.


