தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம், உலகம் முழுவதும் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் ஒரு சிறப்புக் காணொளி மற்றும் புகைப்படம் வெளியிட்டு உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில், பிரதீப் ரங்கநாதனுடன் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், செந்தமிழன் சீமான் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவையும், பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பையும், டி. முத்துராஜ் கலை இயக்கத்தை மேற்கொள்கின்றனர். ‘பிரம்மாண்டமான ஃபேமிலி என்டர்டெய்னராக’ உருவாகியுள்ள இந்த படம், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நயன்தாரா தயாரித்துள்ளார். மேலும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் எஸ்.எஸ். லலித்குமார் இணைந்து தயாரிப்பையும், விநியோகத்தையும் மேற்கொள்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் முதல் பாடல் 33 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனையடுத்து, படத்தின் டீசர், ட்ரெய்லர், ஸ்னீக் பிக் போன்றவையும் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் - அனிருத் என்ற பிரபலங்களின் கூட்டணி எனும் வகையிலும், பாடல்கள் பெற்றுள்ள வரவேற்பு காரணமாகவும், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.