மலையாளத்தில் உருவாகியுள்ள திகில் மற்றும் மர்மத் திரில்லர் திரைப்படமான ‘அரூபி’யின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் ஊடகத்தினரின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட டிரெய்லர், அதன் மர்மம் நிறைந்த காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை, திகில் சூழல் மற்றும் தொழில்நுட்ப தரத்தால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. “சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது…” என்ற வசனத்துடன் தொடங்கும் டிரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அபிலாஷ் வாரியர், மொழி எல்லைகளைத் தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படத்தை உருவாக்கியிருப்பதாக தெரிவித்தார். படத்தின் வெற்றிக்கு தொழில்நுட்பக் குழுவின் பங்களிப்பு மிகப்பெரியது என்றும், குறிப்பாக பின்னணி இசையமைப்பாளர் கோபி சுந்தர், ஒளிப்பதிவாளர் ரோபி வர்கீஸ் ராஜ், படத்தொகுப்பாளர் கிஷோர் மோகன் ஆகியோரின் உழைப்பு படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளதாக அவர் கூறினார்.
தயாரிப்பாளர் பிரதீப் ராஜ், நல்ல கதையை நம்பியே இந்தப் படத்தை தயாரித்ததாகவும், பிரபல நட்சத்திரங்களை மட்டுமே நம்பாமல் திறமையான புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இப்படத்தை உருவாக்கியதாகவும் தெரிவித்தார். திரைப்படங்களை சரியான ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது என்றும், ‘அரூபி’க்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கதாநாயகன் விஷாக் ரவி, இது தனது முதல் ஹீரோ படம் என்பதால் ரசிகர்களின் ஆதரவு மிகவும் முக்கியம் என்று கூறினார். பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கதையின் பயணம் தொடங்கியதாகவும், கதையின் வலிமையால் மலையாளத்துடன் தமிழிலும் வெளியிட முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். ஹாரர் திரைப்படத்திற்கு பின்னணி இசையும் சவுண்ட் டிசைனும் முக்கிய அம்சங்கள் என்பதால், அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நடிகைகள் நேஹா சாவ்லா மற்றும் சாக்ஷி படாலா இருவரும் இப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். சுமார் 300 ஆண்டுகள் பழமையான வீட்டில் படப்பிடிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்க அனுபவமாக இருந்ததாக நேஹா சாவ்லா தெரிவித்தார். மொழி சவாலாக இருந்தாலும், இயக்குநரின் நம்பிக்கையால் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பதாக சாக்ஷி படாலா கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்கள் சம்பத் ராம், அசோக், விண்செண்ட் அசோகன், இசையமைப்பாளரும் இயக்குநருமான எஸ்.எஸ். குமரன், விநியோகஸ்தர் ராகவா ராம் மற்றும் தயாரிப்பாளர் ஜெயராம் ஆகியோர் ‘அரூபி’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும், கதையம்சத்திலும் தரமான படைப்பாக உருவாகியிருப்பதாக பாராட்டி, படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தனர்.
‘அரூபி’ திரைப்படத்தில் விஷாக் ரவி, நேஹா சாவ்லா, சாக்ஷி படாலா, ஜாய் மேத்யூ, சிந்து வர்மா, கண்ணன் சாகர், விஜுபால், கிரண் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் அபிலாஷ் வாரியர் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கியுள்ள இப்படத்தை பிரதீப் ராஜ் தயாரித்துள்ளார். புனர்த்தம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு வினீத் வி.டி. படத்தொகுப்பு செய்துள்ள நிலையில், மகேஷ் ஸ்ரீதர் கலை இயக்குநராகவும், ஹரி நாராயணன் பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளனர்.
மர்மம், திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘அரூபி’, திரில்லர் திரைப்பட ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்புடன் விரைவில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.


