மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘வாரணாசி’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் மகேஷ் பாபு ஏற்றிருக்கும் ‘ருத்ரா’ கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இரண்டு பிரத்யேக புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
வெளியாகியுள்ள முதல் புகைப்படத்தில், அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே மூங்கில் தெப்பத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கும் ருத்ராவாக மகேஷ் பாபு காட்சியளிக்கிறார். அமைதியான தோற்றத்துடன் அதே நேரத்தில் கம்பீரமும் கவர்ச்சியும் நிறைந்த அவரது தோற்றம், கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மற்றொரு புகைப்படம் ஆப்பிரிக்காவின் கென்யாவில் உள்ள புகழ்பெற்ற மாசாய் மாரா சமவெளிக்கு அழைத்துச் செல்கிறது. ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வைல்ட்பீஸ்ட் விலங்குகளுக்கு மத்தியில் நிற்கும் ருத்ரா, தன்னம்பிக்கையும் அதிகாரமும் கலந்த பார்வையுடன் பின்னோக்கிப் பார்க்கும் காட்சியாக அது அமைந்துள்ளது.
இந்த இரண்டு புகைப்படங்களும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட உலகத்திற்கான ஒரு சிறிய அறிமுகமாக அமைந்துள்ளன. இந்தியாவின் புனித நீர்நிலைகளில் தொடங்கி, உலகின் தொலைதூர காடுகள் மற்றும் வனப்பகுதிகள் வரை பயணிக்கும் ஒரு மனிதனின் அசாதாரணமான கதையாக இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. நூற்றாண்டு காலத்தை உள்ளடக்கிய இந்த உலகளாவிய பயணம், இந்திய சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டிய ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
ருத்ரா கதாபாத்திரம் குறித்து இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி பேசும்போது, “தன்னைவிட மிகப் பெரிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே ருத்ரா பிறந்திருக்கிறான். அவன் விரும்பிக் கேட்காத ஒரு விதியைச் சுமந்து செல்கிறான். அவனிடம் நகைச்சுவை உணர்வும் இருக்கிறது, மென்மையும் இருக்கிறது; அதே நேரத்தில் அவன் மிகவும் கடுமையானவனாகவும் இருக்கிறான். இந்த அனைத்து பரிமாணங்களையும் மகேஷ் பாபு கதாபாத்திரத்திற்குள் கொண்டு வந்துள்ளார். கடுமையான தோற்றத்தை வெளிப்படுத்துவது எளிது. ஆனால் அதே தருணத்தில் கடுமையையும் மென்மையையும் வெளிப்படுத்தக்கூடியவர்கள் மிகவும் சிலரே” என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆப்பிரிக்காவில் நடைபெற்ற படப்பிடிப்பு குறித்து பேசிய ராஜமவுலி, கிலிமஞ்சாரோ மற்றும் மாசாய் மாரா பகுதிகளில் படமாக்கப்பட்ட காட்சிகள் இயற்கையின் பிரம்மாண்டத்தை அப்படியே பதிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு பிரம்மாண்டமான அரங்கத்தாலும் வழங்க முடியாத அனுபவத்தை அந்த இயற்கை நிலப்பரப்பு படத்திற்கு வழங்கியதாகவும், சில நேரங்களில் தன் கண்முன் விரிந்த காட்சிகளை 1.43:1 விகிதத்திலான ஐமேக்ஸ் திரைக்கூட முழுமையாக உள்வாங்க முடியாது என தோன்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ‘வாரணாசி’ திரைப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம், 2027-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி உலகம் முழுவதும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


