விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் மறைந்து கிடக்கும் வேதனைகளையும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்திற்கான போராட்டத்தையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கீகாரம்’. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் துணை இயக்குநராக பணியாற்றிய தென்பாதியான் இயக்கியுள்ள இந்த படத்தில், கே.ஜெ.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், தடகள விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் அநீதிகள், அதிகார அமைப்புகளின் அலட்சியம் மற்றும் அங்கீகாரத்திற்கான அவர்களின் போராட்டத்தை வலுவாக எடுத்துரைக்கிறது.

வெளியான டிரெய்லரில், தனது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் நீதிமன்றத்தை நாடும் ஒரு தடகள வீரனின் உணர்ச்சிமிக்க பயணம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக கோர்ட் காட்சிகளில் இடம்பெறும் தீவிரமான வசனங்களும், உணர்வுப்பூர்வமான தருணங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

மேலும், இப்படத்திற்காக சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமான நீதிமன்ற வளாக செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றிருப்பதும் பேசுபொருளாகியுள்ளது.

கே.ஜெ.ஆருடன் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமு தங்கராஜின் கலை இயக்கமும், சம்பத் ஆழ்வாரின் ஒலி வடிவமைப்பும், ஷெரீப்பின் நடன அமைப்பும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.