இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய திரைப்படத்தில் நடிகர் மாதவன் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூலை மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனுடன் வெளியிடப்பட்டுள்ள மாதவனின் புதிய லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஜி.டி. நாயுடுவின் தோற்றத்தையே பிரதிபலிக்கும் வகையில் மாதவன் மாறியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

‘இந்தியாவின் எடிசன்’ என்றும் ‘கோயம்புத்தூரின் செல்வத்தை உருவாக்கியவர்’ என்றும் அழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையின் முக்கியமான ஒரு அத்தியாயத்தை இப்படம் பேசுகிறது. கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்திருப்பதும் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சாதனைகளையும் பாரம்பரியத்தையும் பேசும் இன்னொரு ஊக்கமளிக்கும் கதையை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கிறது இந்த படம்.

ஏஜிஎஸ் சினிமாஸ் தமிழக வெளியீட்டையும், ஸ்பிரிட் மீடியா ஆந்திரா மற்றும் தெலங்கானா வெளியீட்டையும் கவனிக்கிறது. வெளிநாட்டு வெளியீட்டை ஏபி இண்டர்நேஷனலும், கேரள வெளியீட்டை ஊர்வசி தியேட்டர்ஸும் மேற்கொள்ள உள்ளன.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீப காலங்களில் மாதவன் நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமான மற்றும் சக்திவாய்ந்த கதாபாத்திரமாக இது அமையும் என திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.