நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. சிதாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விழாவில் தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்ஷி, இயக்குநர் வெங்கி அட்லூரி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகர் சூர்யா, நடிகை மமீதா பைஜூ, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் படக்குழுவினர் திரைப்படம் ஒரு உணர்வுபூர்வமான குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ், தனது திரைப்பயணத்தில் சூர்யாவும் ஜி.வி.பிரகாஷும் அளித்த ஊக்கத்தை நினைவுகூர்ந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதல் பாடல் எழுதும் வாய்ப்பை இயக்குநர் வெங்கி அட்லூரி வழங்கியதாகவும், ரசிகர்களின் வரவேற்பால் ‘பட்டாம்பூச்சி’ பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

நடிகை மமீதா பைஜூ, சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவத்தை மறக்க முடியாத ஒன்றாக விவரித்தார். படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவின் ஒழுக்கம், பணிவான அணுகுமுறை மற்றும் அர்ப்பணிப்பை பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொண்டதாக கூறிய அவர், ராதிகா சரத்குமாரின் வழிகாட்டுதலும் தனக்கு பெரும் ஆதரவாக இருந்ததாக கூறினார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஒரு மனதை தொடும் குடும்ப திரைப்படமாக இருக்கும் என்றும், ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தினருடன் திரையரங்கில் ரசிக்க வேண்டிய படமாக இது அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்ஷி, சூர்யாவை நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்தியாசமான தோற்றத்திலும் கதாபாத்திரத்திலும் ரசிகர்கள் காணப்போகிறார்கள் என்று கூறினார். மேலும் படத்தின் முதல் பாதியில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவரும் எனவும், இந்த படத்தின் மீது படக்குழுவிற்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி, சூர்யாவின் சொந்த மண்ணான கோவையில் இசை வெளியீட்டு விழாவை நடத்துவது தங்களது விருப்பமாக இருந்ததாக கூறினார். இந்த திரைப்படம் சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து குடும்பங்களும் ஒன்றாக ரசிக்கக்கூடிய படமாக இருக்கும் என்றும், படம் முடிந்து வெளியே வரும் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய சூர்யா, தனது பிறந்தநாளை கொண்டாடாதபோதிலும் ரசிகர்கள் மேற்கொண்ட ரத்ததானம் மற்றும் நலத்திட்ட பணிகள் குறித்து பெருமிதம் தெரிவித்தார். குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் உலகத்தை விட உறவுகளுடனான நினைவுகளே வாழ்க்கையின் உண்மையான செல்வம் என்றும் உருக்கமாக பேசினார். ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ரொமான்ஸ், குடும்பம், நகைச்சுவை, உணர்வு மற்றும் ஹீரோயிசம் ஆகிய அனைத்தையும் இணைத்த முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என கூறிய அவர், ஆகஸ்ட் 14-ஆம் தேதி குடும்பத்துடன் திரையரங்குகளில் வந்து படத்தை பார்க்குமாறு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.