
tamil news ➔ movie reviews ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy Ottran Dorai|2025-08-14
கூலி – எதிர்பார்ப்பு வானளவு… நிறைவேற்றம் பாதியிலேயே!
ரஜினிகாந்த் 50 ஆண்டுகள் நிறைவு செய்யும் காலத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை கிளப்பியது. “ஆயிரம் கோடி வசூல் உறுதி”, “ரஜினி – லோகேஷ் காம்போ” என பில்ட்அப் வானளவு. ஆனால், படம் அந்த உயரத்திற்கு எட்டியதா?
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சட்டவிரோத வியாபாரம் நடத்தும் நாகார்ஜூனாவின் பேரரசு, சத்யராஜின் மர்மமான மரணம், அதை விசாரிக்க வரும் ரஜினிகாந்த்… இதன் பின்னாலே நட்பு, பழிவாங்கல், கடத்தல் கும்பலின் கொடூரங்கள் என பல அடுக்குகளுடன் கதை விரிகிறது. ஆனால், பல கிளைக் கதைகளில் சிக்கி, படத்தின் ஓட்டம் சில நேரங்களில் மெதுவாகி விடுகிறது.
ரஜினிகாந்த், “தேவா” என்ற கேரக்டரில் அவரது கவர்ச்சி, பிளாஷ்பேக் கூலி காட்சிகளில் பழைய ஸ்டைல், சில உணர்ச்சி தருணங்களில் வரும் நடிப்பு – இவை ரசிகர்களை உற்சாகப்படுத்தும். ஆனால், வழக்கமான பஞ்ச் வசனங்கள், மாஸ் காட்சிகள், காமெடி டச் குறைவாக இருப்பது பினாயமாகிறது.
படம் முழுவதையும் சவுபின் ஷாஹிர் தன்னுடைய வலுவான வில்லத்தன நடிப்பால் தாங்கிச் செல்கிறார். அவர்தான் முக்கிய ஹைலைட்.
இந்தப்படம் மூலம், வில்லன் வேடத்தில் நாகார்ஜூனா புதுமையாக முயற்சி செய்துள்ளார். சில இடங்களில் நினைவில் நிற்கும் நடிப்பு இருந்தாலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
கதையில் அதிக பங்கு கொண்டவர் ஸ்ருதி ஹாசன். ரஜினியுடன் வரும் காட்சிகளில் உணர்ச்சி வெளிப்பாடால் கைதட்ட வைக்கிறார்.
குறைந்த அளவில் திரையில் தோன்றினாலும், வலிமையான பங்களிப்பை கொடுத்துள்ளார் சத்யராஜ்.
உபேந்திரா மற்றும் அமீர்கான், க்ளைமாக்ஸ் காட்சியில் சிறப்பு தோற்றம் கொடுப்பதினால், அவர்களிருவரும் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை. அவர்கள் இருவரையும் வேஸ்ட் செய்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
அனிருத் இசையில் “மோனிகா” பாடல் மட்டும் செவியில் ஒட்டும். பின்னணி இசை சில இடங்களில் வேலை செய்தாலும், புதுமை குறைவாகவே தெரிகிறது. கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுக காட்சிகளை பெரிதாக காட்டுகிறது. ஆர்ட் டைரக்ஷன், கிராபிக்ஸ் வேலை பிளாஷ்பேக் சீன்களில் அழுத்தமாக தெரிகிறது.
லோகேஷ் கனகராஜ், பெரிய நட்சத்திரங்களின் குழுவை ஒருங்கிணைத்துள்ளார். ஆனால், கதை பல இடங்களில் விலகி, ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. விக்ரம் போல கூர்மையான திருப்பங்கள் இங்கு இல்லை. இடைவேளை வரை ஈர்க்கும், ஆனால் பிறகு கதை சிதறுகிறது.
கூலி – ஒரு பக்கா ரஜினி படம் என்று சொல்ல முடியாது. மாஸ் வசனங்கள், குடும்பம் ரசிக்கும் எலெமென்ட்ஸ் குறைவாக இருக்கலாம். ஆனால், ரஜினியின் கவர்ச்சி, சவுபின் ஷாஹிரின் அசத்தல் நடிப்பு, ஸ்ருதி ஹாசனின் உணர்ச்சி பங்களிப்பு ஆகியவை படத்தை ஒருமுறை பார்க்கத் தகுந்ததாக ஆக்குகின்றன.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் வந்த கூலி, அதனை பாதியிலேயே பூர்த்தி செய்கிறது. ரசிகர்கள் “வாவ்” என்று கைகொட்டாமல், “சரி… ஒருமுறை பார்த்தால் போதும்” என்று திரும்பிச் செல்லக்கூடிய படம் இது. லோகேஷ் கனகராஜின் பிடிவாதத்தால் "கூலி" திரைபடத்துக்கு தணிக்கை குழு அளித்துள்ள "A" சான்றிதழ், 18 வயதுக்கு குறைவான ரஜினி ரசிகர்களை படம் பார்க்க முடியாதபடி ஏமாற்றியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த "A" சான்றிதழ் படத்தின் வசூலை பெரியதாக பாதித்துள்ளது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
மதிப்பீடு: 2.75/5
