ராஜாராமன் கதாபாத்திரத்தில் அர்ஜுனும், அவரது மனைவி நீலவேணியாக அபிராமியும் நடித்துள்ளனர். இவர்களின் மகளாக நிலா கதாபாத்திரத்தில் ப்ரீதி முகுந்தனும், நிலாவின் சித்தப்பாவாக இளங்கோ கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னாவும் நடித்துள்ளனர். சென்னையில் குடும்பமாக வாழும் இவர்கள் மருந்துக் கடையை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் சிறுவர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்கும் ஆசிரியராக அர்ஜுன் தோன்றுகிறார்.
மறுபுறம், மிகப்பெரிய தொழிலதிபரான வருண் தயாளன் கதாபாத்திரத்தில் ஜான் கொக்கென் நடித்துள்ளார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் ஒப்பந்தத்தை கைப்பற்ற திட்டமிடும் அவர், அதற்கான கமிஷன் தொகையை பரிமாறும் நேரத்தில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது. அவரது அடியாளுக்கு ஏற்படும் கார் விபத்திற்குப் பிறகு பணம் மாயமாகி விடுகிறது. அந்த பணம் மீண்டும் கிடைக்கிறதா? வருண் தயாளனின் கனவு திட்டம் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
இந்த மையக்கதையுடன் ராஜாராமன் குடும்பத்தின் உறவுகள், உணர்வுகள், மோதல்கள், குடும்ப பாசம் மற்றும் ஆக்ஷன் தருணங்களை இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சுவாரஸ்யமாக பின்னியுள்ளார். குடும்ப செண்டிமெண்டும், கமர்ஷியல் ஆக்ஷனும் சமநிலையாக இணைந்திருப்பது படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
அர்ஜுன் தனது இயல்பான கராத்தே திறமையையும் மாஸ் திரைநிலையையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அபிராமி தனது அனுபவமிக்க நடிப்பின் மூலம் கதைக்கு வலுசேர்க்கிறார். ப்ரீதி முகுந்தன் எமோஷனல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். விவேக் பிரசன்னா தனது இயல்பான நடிப்பாலும் நகைச்சுவை கலந்த வெளிப்பாட்டாலும் ரசிக்க வைக்கிறார். ஜான் கொக்கென், பவன், அர்ஜுன் சிதம்பரம், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர்.
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்தின் அதிரடியை மேலும் உயர்த்துகிறது. ஃபீனிக்ஸ் பிரபுவின் சண்டைக் காட்சிகள் திரையரங்கில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவும், பிரதீப் இ. ராகவின் படத்தொகுப்பும் படத்தின் வேகத்தையும் தரத்தையும் தக்க வைத்துள்ளன.
முதல் படத்திலேயே இயக்குநர் சுபாஷ் கே ராஜ், குடும்ப உணர்வுகள், ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் கமர்ஷியல் அம்சங்களை இணைத்து ரசிகர்கள் ரசிக்கும் வகையிலான முழுமையான என்டர்டெய்னரை வழங்கியுள்ளார். குறிப்பாக குடும்ப ரசிகர்கள், இளைஞர்கள் மற்றும் ஆக்ஷன் ரசிகர்களை கவரும் படமாக ‘பிளாஸ்ட்’ அமைந்துள்ளது.
மதிப்பீடு : 4/5


