90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரித்து, இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, காளி வெங்கட், வி.டி.வி. கணேஷ், ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனித்துள்ளார். கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காளி வெங்கட், இந்தப் படத்தின் படப்பிடிப்பு மனிதர்கள் செல்வதற்கே கடினமான மலைப் பகுதிகளில் நடைபெற்றதாக கூறினார். சாலையே இல்லாத இடங்களில் பல கிலோமீட்டர்கள் நடந்து சென்று, டென்ட் அமைத்து தங்கி படப்பிடிப்பில் ஈடுபட்ட அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாதது என்றார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்தை அடைவதே ஒரு சவாலாக இருந்ததாகவும், ஆனால் இயக்குநர் படமாக்கிய காட்சிகளை பார்த்தபோது அனைத்து கஷ்டங்களும் மறந்துவிட்டதாகவும் தெரிவித்தார். கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் இந்த திரைப்படம் வெளியாகிய பிறகு நிச்சயம் பேசப்படும் என்றும், அருள்நிதி போன்ற கதைத்தேர்வில் கவனமான நடிகர் நடித்திருப்பதே படத்தின் தரத்தை உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சக்திவேலன், வணிக ரீதியில் மட்டுமல்லாமல் சமூக அக்கறையுடனும் இப்படம் உருவாகியுள்ளதாக பாராட்டினார். அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, கல்வி வாய்ப்பின்மை மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் உண்மையான வாழ்க்கையை இப்படம் உணர்வுபூர்வமாக பதிவு செய்திருப்பதாக அவர் கூறினார். காடு, மலை மற்றும் இயற்கையை மையமாகக் கொண்ட காட்சிகளை ஒளிப்பதிவாளர் சுகுமார் பிரம்மாண்டமாக பதிவு செய்திருப்பதாகவும், அருள்நிதியின் வருகையால் படம் கலைப்படைப்பிலிருந்து அனைவரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

பேபி கிருத்திகா பேசுகையில், திரையுலக பின்னணி எதுவும் இல்லாத தனக்கு இப்படத்தில் வாய்ப்பு அளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்தார். முதல் படத்திலேயே அருள்நிதி, ஆரவ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது தனது கனவு நனவான தருணம் என்றும், ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியாகியுள்ள "அல்லிப்பூவே" பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் கூறினார். நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கிய இந்தப் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ரம்யா பாண்டியன், ஆரம்பத்தில் கிராமத்து கதைகளில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க நினைத்ததாக கூறினார். ஆனால் இயக்குநர் கூறிய கதையின் மையக்கரு தன்னை ஆழமாக கவர்ந்ததால் உடனடியாக இப்படத்தில் நடிக்க சம்மதித்ததாக தெரிவித்தார். கல்வி பெறும் வாய்ப்பே இல்லாத மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை என்பதால், இது ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பாகவும் தோன்றியதாக கூறினார். வரைபடத்தில்கூட குறிப்பிடப்படாத மலைப்பகுதிகளில், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத சூழலில் படப்பிடிப்பு நடைபெற்றது என்றும், அங்குள்ள மக்களுடன் வாழ்ந்த அனுபவம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார். ஆரவ் காட்டிய அர்ப்பணிப்பும், அருள்நிதியின் கதைத்தேர்வும் இந்த திரைப்படத்தின் மீதான தனது நம்பிக்கையை மேலும் அதிகரித்ததாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் கணேஷ் விநாயகன், 'அருள்வான்' சாதாரண திரைப்படம் அல்ல; பல வலிகளையும் சமூக உண்மைகளையும் பேசும் படைப்பு என்றார். இதற்கு முன் தயாரிப்பாளர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால் இந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் தாமாகவே அழைத்து படம் இயக்குமாறு கேட்டது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்றும் கூறினார். ஆரம்பத்தில் சிறிய அளவில் திட்டமிடப்பட்ட இப்படத்தை தயாரிப்பாளர் பெரிய அளவுக்கு கொண்டு சென்றதாகவும், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களை இணைத்ததாகவும் அவர் தெரிவித்தார். படப்பிடிப்பு நடைபெற்ற மலைப்பகுதியில் 18 நாட்கள் அனைவரும் டென்ட் அமைத்து தங்கி, விலங்குகள் நடமாடும் சூழலில் பணியாற்றியதாகவும், அந்த சூழலிலும் பேபி கிருத்திகா வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது என்றும் அவர் பாராட்டினார்.

ஆரவ் மற்றும் அருள்நிதி குறித்து பேசும்போது, சமூகப் பொறுப்புள்ள கதையாக இருந்ததால் இருவரும் எந்த தயக்கமும் இன்றி ஒப்புக்கொண்டதாக இயக்குநர் தெரிவித்தார். கதையின் முதல் பாதியில் மக்களின் உரிமைக்காக போராடும் இளைஞராக ஆரவ் நடித்திருப்பதாகவும், இரண்டாம் பாதியில் சமூக நீதிக்காக களம் இறங்கும் மாவட்ட ஆட்சியராக அருள்நிதி தோன்றுவதாகவும் கூறினார். ஜி.வி. பிரகாஷின் இசை இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அருள்நிதி பேசுகையில், ஆரம்பத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே கால்ஷீட் தேவைப்படும் என்று கூறிய இயக்குநர், பின்னர் கதையின் தேவைக்கேற்ப அது இருபது நாட்களாக உயர்ந்ததாக சிரித்தபடி நினைவுகூர்ந்தார். முத்துவேல் என்ற மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், குழந்தைகளின் கல்வி உரிமையை வலியுறுத்தும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் தொடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

ஆரவ் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டபோது, இப்படம் போன்ற கதாபாத்திரம் மீண்டும் கிடைக்குமா என்ற எண்ணமே தன்னை உடனடியாக சம்மதிக்க வைத்ததாக தெரிவித்தார். காளி வெங்கட்டுடன் இணைந்து நடித்த அனுபவம் மிகவும் சிறப்பானது என்றும், அவரது இயல்பான நடிப்பை நேரில் பார்த்து வியந்ததாகவும் கூறினார்.

சமூக அக்கறை, கல்வியின் அவசியம், இயற்கை சூழலில் நடைபெற்ற சவாலான படப்பிடிப்பு மற்றும் முன்னணி நடிகர்களின் அர்ப்பணிப்பு ஆகிய அம்சங்களால் 'அருள்வான்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.