நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் இப்படம், வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய மூன்று நகரங்களை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஹாய்’, குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ உள்ளிட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் பாடலாசிரியராக பணியாற்றிய விஷ்ணு எடவன், ‘ஹாய்’ படத்தின் மூலம் இயக்குநராக தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறார். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களின் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.

ஏற்கனவே வெளியான ‘ஹாய்’ படத்தின் முதல் பாடல் டிஜிட்டல் தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குடும்ப உறவுகள் மற்றும் மகிழ்ச்சியை மையமாகக் கொண்ட இத்திரைப்படம், எளிமையான கதைக்களத்துடன் மனதிற்கு நெருக்கமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என இயக்குநர் விஷ்ணு எடவன் தெரிவித்துள்ளார்.

‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘யாரடி நீ மோகினி’ போன்ற வில்லத்தனம் இல்லாத குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களின் உணர்வை ‘ஹாய்’ கொண்டிருக்கும் என்றும், அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் கூறியுள்ளார்.

நயன்தாரா – கவின் கூட்டணி, விஷ்ணு எடவனின் இயக்குநர் அறிமுகம் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்திருப்பது என பல்வேறு காரணங்களால் ஏற்கனவே கவனம் பெற்றுள்ள ‘ஹாய்’, ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகி ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறது.