அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது.

‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ள இப்படத்திற்கு கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்துள்ளார்.

காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீட்டு நிகழ்வில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம், கவிதா பாண்டியன், நடிகர் அசோக் செல்வன், நடிகை ப்ரீத்தி முகுந்தன், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் அபிநயா செல்வம், ‘ஓ மை கடவுளே’ படத்திற்குப் பிறகு நல்ல கதைக்காக காத்திருந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் ராஜா கூறிய இந்தக் கதை அனைவருக்கும் பிடித்ததால் இப்படத்தை தொடங்கியதாக தெரிவித்தார். அசோக் செல்வன் முழுமையான நம்பிக்கையுடன் படத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், படத்தின் பணிகளை நிறைவு செய்து செப்டம்பரில் வெளியிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இயக்குநர் ஆர். கார்த்திகேயன் கூறுகையில், ‘அன்பில் அவன்’ பெண்களின் கனவு, அதை அடைவதற்கான முயற்சி, போராட்டம் மற்றும் சவால்களை காதலுடன் உணர்வுபூர்வமாக பேசும் திரைப்படம் என்றார். அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இணைந்து உருவாக்கும் புதிய திரை ஜோடி, அழகான காட்சிகள், கோவிந்த் வசந்தாவின் இசை மற்றும் ரசிகர்கள் ரசிக்கும் திரையரங்க அனுபவம் ஆகியவை படத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன், ‘அன்பில் அவன்’ தனது இதயத்திற்கு நெருக்கமான படைப்பு என்றும், நீண்ட நாட்களாக இப்படத்திற்காக காத்திருப்பதாகவும் கூறினார். திருமணமாகாத பெண்கள் மட்டுமின்றி திருமணமான பெண்களும் ரசிக்கும் வகையில் படம் இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, ஒவ்வொரு படைப்பிலும் புதுமையை முயற்சிக்க விரும்புவதாகவும், ‘அன்பில் அவன்’ படத்தின் கதை ஏற்கனவே பார்த்திருக்கக்கூடிய காதல் கதையாக இருந்தாலும், அதன் திரைக்கதை மற்றும் திரையரங்க அனுபவம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், படத்தில் பெண்கள் ரசிக்கக்கூடிய தருணங்களுடன் ஏராளமான மாஸ் காட்சிகளும் இருப்பதாகவும், காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான் என்பதே படத்தின் ஒன்லைன் என்றும் அசோக் செல்வன் கூறினார். காதல் ஒரு புத்திசாலியை முட்டாளாக்கவும், சாதாரணமான ஒருவரை சாதனையாளராக மாற்றவும் முடியும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பை ஏற்கனவே படம் பார்த்தவர்கள் பாராட்டியுள்ளதாகவும், படம் வெளியான பிறகு ரசிகர்களிடமிருந்தும் அவருக்கு பாராட்டு கிடைக்கும் எனவும் கூறிய அசோக் செல்வன், கோவிந்த் வசந்தாவின் இசை படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என்றும், ‘96’ படத்தின் இசையைப் போலவே இப்படத்தின் இசையும் பேசப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

காதல், கனவு, போராட்டம் மற்றும் திரையரங்க பொழுதுபோக்கு ஆகிய அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.