கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டோரதி”. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 10-வத படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் கதை மற்றும் உருவாக்கம் குறித்து பேசியுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், “டோரதி” தனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் என்று தெரிவித்துள்ளார்.

1990-களின் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதையை கொரோனா காலகட்டத்தில் எழுதியதாக கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் உருவான கதை என்றாலும், தொடர்ந்து மற்ற திரைப்படப் பணிகளில் ஈடுபட்டதால் உடனடியாக இதை படமாக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். மதுரையைச் சேர்ந்த இரு நண்பர்களின் வாழ்க்கையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் நுழைந்த பிறகு ஏற்படும் மாற்றங்களை மையமாகக் கொண்டு கதை நகர்வதாகவும், அந்தப் பெண்ணின் கதாபாத்திரத்திற்குத்தான் “டோரதி” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இப்படத்தில் சனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்திற்காக அவர் உடல் எடையைக் குறைத்து தயாரானதாகவும், இந்தப் படத்திற்காக நீண்ட காலம் காத்திருந்ததாகவும் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். குறும்பட காலத்திலிருந்தே தனக்கு அறிமுகமான ரிஷிகாந்த், கதையைக் கேட்டதும் படத்தில் நடிக்க சம்மதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷிடம் கதையைச் சொன்னபோது, அவர் உடனடியாக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், அவரது கதாபாத்திரத்தின் பெயரே டோரதி என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது இளையராஜாவின் இசை. இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்ததாக கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின் ஒரு பகுதி முடிந்த பின்னர் படத்தை இளையராஜாவிடம் காண்பித்ததாகவும், படத்தைப் பார்த்த அவர் மறுநாளிலிருந்தே பின்னணி இசைப் பணிகளைத் தொடங்கலாம் என்று கூறியதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார். இளையராஜாவுடன் சுமார் 25 நாட்கள் பணியாற்றிய அனுபவம் தனது திரையுலகப் பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“டோரதி” படத்திலிருந்து ஏற்கனவே “கல்யாண விருந்து”, “முத்துமணி” உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. மேலும் ஒரு பாடல் வெளியாக இருப்பதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி இசையை மையப்படுத்தி செப்டம்பர் 5-ம் தேதி சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், படத்தின் புரமோஷன் பாடலில் இளையராஜா நடித்தும் பாடியும் இருப்பதாக கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள “டோரதி”, கார்த்திக் சுப்பராஜின் 10-வது திரைப்படம் என்பதுடன், இளையராஜாவுடனான அவரது முதல் கூட்டணியாகவும் அமைந்துள்ளது. இப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலகத் திரையிடலைப் பெறவுள்ள நிலையில், செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.