
tamil news ➔ movie reviews ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2025-07-25
ஹரிஹர வீரமல்லு திரைவிமர்சனம்
பவன் கல்யாண், நிதி அகர்வால் நடிப்பில், மரகதமணி இசையில், ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் கிரிஷ் ஜகர்லமுடி இயக்க ஆரம்பித்து, அதன் பின்னர் அவர் வெளியேறிய நிலையில், படத்தை ஜோதி கிருஷ்ணா நிறைவு செய்து வைத்து பல ஆண்டுகள் கால தாமதத்திற்கு பிறகு இன்று வெளியாகி இருக்கும் படம் தான் ஹரி ஹர வீர மல்லு.
1600களில் இந்த படத்தின் கதை நடக்கிறது. ராபின்ஹுட் போல நவாப் ஆட்களிடம் இருந்து திருடும் பொருட்களை ஏழை மக்களுக்கு கொடுத்து மக்கள் தலைவனாக வாழ்ந்து வருகிறார் வீர மல்லு (பவன் கல்யாண்). நவாபுக்கு செல்ல வேண்டிய வைரங்களையும் அவர் கொள்ளையடித்து வருகிறார். ஆனால், இவரது திருடும் திறமையை கண்டு பூரித்துப்போன நவாப், இவனை வைத்து இங்கே இருந்து டெல்லிக்கு திருடப்பட்ட நம்முடைய கோஹினூர் வைரத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என அவுரங்கசிப்பிடம் (பாபி தியோல்) இருந்து கோஹீனுர் வைரத்தை திருட அனுப்பி வைக்கப்படுகிறார். அவுரங்கசிப்பிடம் இருந்து கோஹீனூர் வைரத்தை மீட்டுக் கொண்டு வந்தாரா? அவுரங்கசிப்புக்கும் ஹரி ஹர வீர மல்லுவுக்கும் உள்ள முன் பகை என்ன? என்பது தான் இந்த படத்தின் கதை.
பவன் கல்யாண் பல வருடங்களுக்குப் பிறகு நடித்து வெளியாகி இருக்கும் படம். ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் தாங்கி நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளிலும், நிதி அகர்வால் உடனான குளோசப் காட்சிகளிலும், 2ம் பாதியில் வரும் சனாதன தர்மம் தொடர்பான எமோஷன் காட்சிகளிலும் தனது நடிப்பால் அப்ளாஸ் அள்ளுகிறார். கிளாமர் பொங்க நிதி அகர்வால் குறைவான காட்சிகளில் வந்தாலும், திரையை தேவ லோகத்து ரம்பை போல ஆளுகிறார். பாபி தியோல் அவுரங்கசிப்பாக அலட்டல் இல்லாமல், அற்புதமாக நடித்து தனது வில்லத்தனைத்தை காட்டியிருக்கிறார்.
திரைக்கதையை பொருத்தவரையில் படத்தின் முதல் பாதி திரைக்கதை காதல் அதிரடி ஆக்சன் எமோஷன் என நகரும் பக்கா தெலுங்கு கமர்சியல் கதை. இரண்டாம் பாதியில் இறுதிக்காட்சியைத் தவிர மற்ற அனைத்தும் ரசிக்கும் விதமாக உள்ளது.
படத்தின் இசை மரகதமணி, இசையால் படத்தை இரண்டு படி உயர்த்தி காட்டியுள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவும் சரி, VFX காட்சிகளும் சரி இன்னும் கொஞ்சம் தரம் பிடித்து மெருகூட்டி இருக்கலாம். கொஞ்சம் அல்ல நிறையவே கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இந்தப் படத்தின் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா படத்தை முழுக்க முழுக்க பவன் கல்யாணின் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்ற முனைப்பிலேயே எடுத்துள்ளார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
ஆக மொத்தத்தில் ஹரிஹர வீரமல்லு மக்களுக்கு பிடிக்கும் பக்கா தெலுங்கு படம்.
