ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ வெளியாகியுள்ளது. இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் பாடலை வெளியிட்டுள்ளார். லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை ரா. வெங்கட் இயக்குகிறார். மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பா. விஜய் வரிகள் எழுதியுள்ளார்; முருகவேல் பாடியுள்ளார்.
மகனைப் பிரிந்து வாழும் தந்தையின் அன்பையும் ஏக்கத்தையும் ‘தங்கப்புள்ள’ பாடல் பேசுகிறது. தந்தையும் மகனும் ஒன்றாக இருக்கும் தருணங்களைக் காட்டாமல், மகனின் மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைவிலிருந்து யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் தந்தையின் உணர்வுகளைப் பாடல் மையப்படுத்துகிறது. மகனிடம் நேரடியாக அன்பைப் பகிர முடியாத தந்தையின் தவிப்பும், மகிழ்ச்சியை மறைந்திருந்து ரசிக்கும் பாசமும் பாடலில் வெளிப்படுகின்றன.
மென்மையான இசை, பா. விஜய்யின் உணர்வுப்பூர்வமான வரிகள், முருகவேலின் குரல் ஆகியவை பாடலின் உணர்வுக்கு வலுசேர்க்கின்றன. வார்த்தைகளால் சொல்ல முடியாத தந்தையின் அன்பையும் பிரிவின் வலியையும் எடுத்துரைக்கும் பாடல், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும் கதையாக உருவாகும் ‘தகப்பன்’, தந்தை – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டுள்ளது. ‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு ஜீவா முழுக்க கிராமப் பின்னணியில் நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.
கே. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது. சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனமும், ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 24-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள ‘தகப்பன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை, தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடல் மேலும் அதிகரித்துள்ளது.


