கொடைக்கானலுக்கு பிரீ-வெட்டிங் ஷூட்டுக்காகச் செல்லும் இளம் ஜோடியின் பயணம், பெண் திடீரெனக் காணாமல் போனதும் மர்மமான திருப்பம் எடுக்கிறது. அவரைத் தேடி போலீசார் விசாரணையைத் தொடங்க, இது ஒரு சாதாரணக் காணாமற்போன வழக்கு மட்டுமல்ல என்ற உணர்வு மெல்ல உருவாகிறது. அடுத்தடுத்து எழும் கேள்விகளும் சில எதிர்பாராத திருப்பங்களும் கதையை முன்னெடுக்கின்றன.
கொடைக்கானலின் பனிமூட்டமான சூழலும், மர்மம் நிறைந்த பங்களாவும் படத்துக்கு நல்ல பின்னணியாக அமைந்துள்ளன. ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சில காட்சிகளில் பதற்றத்தை உருவாக்க உதவுகின்றன. கதாநாயகனாக வரும் அருண் கார்த்தி உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வழங்க, விசாரணை அதிகாரியாக சேரன் ராஜ் நிதானமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கதையின் சில திருப்பங்கள் பார்வையாளர்களின் ஆர்வத்தையும் தக்கவைக்கின்றன.
ஆனால், கதையின் வேகம் சீராக இல்லை. ஒரே உணர்வை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் காட்சிகள் நீளமாகத் தோன்றுகின்றன. விசாரணைப் பகுதிகளும் இன்னும் சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்திருக்கலாம். இதனால், படம் முழுவதும் பதற்றத்தைத் தக்கவைக்க முடியவில்லை. இறுதியில் மர்மத்துக்கான விளக்கங்களும் திரைக்கதையின் தாக்கத்தைக் குறைக்கின்றன.
சுவாரஸ்யமான கதைக்கருவும் சூழலுக்கேற்ற காட்சியமைப்பும் இருந்தாலும், திரைக்கதையின் வேகக்குறைவு பனி விழும் இரவு படத்தின் அனுபவத்தைச் சராசரிக்குள் நிறுத்துகிறது. மர்மத் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு சில சுவாரஸ்யமான தருணங்கள் கிடைக்கும்; ஆனால் படம் இன்னும் இறுக்கமாக அமைந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மதிப்பீடு: 2.5/5


