இன்றைய சமூகத்தில் அதிகம் பேசப்படாத ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு மனதை உலுக்கும் படைப்பாக உருவாகியுள்ளது இயக்குநர் சசியின் ‘நூறு சாமி’. குடும்பம், உறவுகள், சமூகப் பார்வை, பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை உரிமை ஆகியவற்றை இணைத்து சொல்லப்படும் இந்த படம், வழக்கமான வணிக சினிமாவை விட உணர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
இளம் வயதிலேயே வாழ்க்கைத் துணையை இழந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களை வளர்த்து பெரியவர்களாக ஆக்குகிறார். காலம் நகர, தனக்கென ஒரு வாழ்க்கையை மீண்டும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருள் உருவாகிறது. ஆனால் அந்த விருப்பம் குடும்பத்தினராலும், சமூகத்தினராலும் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஒரு பெண்ணின் ஆசை, அவளது வயது, குடும்பத்தின் மரபு, சமூகத்தின் தீர்ப்புகள் ஆகியவற்றுக்கு இடையே நடைபெறும் உணர்ச்சிப்பூர்வமான போராட்டம்தான் படத்தின் மையக்கரு.
செல்வி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுவாசிகா, படத்தின் உயிராக திகழ்கிறார். தனிமை, ஏக்கம், தாய்மை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என பல்வேறு மனநிலைகளை மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். பல காட்சிகளில் வசனங்களை விட அவரது முகபாவனைகளே அதிகம் பேசுகின்றன. இந்தக் கதாபாத்திரம் நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும் வகையில் அமைந்துள்ளது.
விஜய் ஆண்டனி குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும், அவரது கதாபாத்திரம் கதையின் முக்கிய திருப்பமாக அமைகிறது. அமைதியான நடிப்பின் மூலம் கதைக்கு தேவையான நம்பகத்தன்மையை அவர் வழங்கியுள்ளார். மகன்களாக நடித்துள்ள அஜய் தீஷன் மற்றும் சக்தி இருவரும் தங்களது கதாபாத்திரங்களை உணர்வுபூர்வமாக கையாள்ந்துள்ளனர். கருணாஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
கிராமத்து வாழ்க்கையின் இயல்பான சூழலை ஒளிப்பதிவாளர் எஸ்.பி. தர்ஷன் அழகாக பதிவு செய்துள்ளார். பாலாஜி ஸ்ரீராமின் இசை கதையின் உணர்வுகளை மேலும் ஆழமாக்குகிறது. குறிப்பாக பின்னணி இசை பல காட்சிகளின் தாக்கத்தை உயர்த்துகிறது. ஹரிஷ் யுவராஜின் படத்தொகுப்பும் படத்தின் ஓட்டத்திற்கு உதவியாக உள்ளது.
முதல் பாதியில் சில காட்சிகள் நீளமாக இருப்பது சற்று பொறுமையை சோதித்தாலும், இரண்டாம் பாதியில் கதையின் உணர்ச்சி வலிமை அதனை மறக்கச் செய்கிறது. குறிப்பாக இறுதிக்கட்ட காட்சிகள் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி முடிவு எடுக்கும் உரிமை யாருக்கு என்பது போன்ற கேள்வியை நேரடியாக எழுப்பும் ‘நூறு சாமி’, குடும்ப உணர்வுகளுடன் சமூகச் செய்தியையும் இணைத்து சொல்லும் தரமான படைப்பாக திகழ்கிறது. வணிக அம்சங்களை விட மனித உணர்வுகளை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.
மதிப்பீடு: 3.5 / 5


